எனது உடல்நலனில் அக்கறை கொண்ட தங்களுக்கு மிகவும் நன்றி என்றும் எனது உடல் ஃபிட்னஸை விட கர்நாடக மாநில வளர்ச்சியில் ஃபிட்னஸ்தான் முக்கியம் என்றும் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமிக்கு பிரதமர் மோடி ஃபிட்னஸ் சேலஞ்ச் விடுத்த நிலையில் குமாரசாமி பதில் அளித்துள்ளார்.
கடந்த மே மாதம் இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ட்விட்டரில், உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து, `சமூக வலைதளங்களில் நீங்கள் உங்கள் உடல்களை எப்படி ஃபிட் ஆக வைத்துள்ளீர்கள் என்பது தொடர்பாக வீடியோ மற்றும் புகைப்படங்களைப் பகிருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் ஃபிட்னஸ் சேலஞ்சை அனுப்புங்கள்’ என தெரிவித்ததுடன், பாலிவுட் நடிகர் ஹிர்திக் ரோஷன், இந்திய கேப்டன் கோலி மற்றும் சாய்னா நேவால் ஆகியோருக்கு இந்த சேலஞ்சை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
அவர் பதிவிட்ட அடுத்த இரண்டு தினங்களில் இந்திய கேப்டன் விராட் கோலி இந்த சேலஞ்சை ஏற்று, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்தார். மேலும் அவர், தனது மனைவி அனுஷ்கா ஷர்மா, இந்தியப் பிரதமர் மோடி மற்றும் முன்னாள் இந்திய கேப்டன் தோனி ஆகியோருக்கு இந்த சேலஞ்சை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் இன்று அவர், தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், அவர் பதிவிட்டுள்ள மற்றொரு ட்விட்டில், “ நான் இந்த சேலஞ்சை கர்நாடக முதல்வர் குமாரசாமி மற்றும் இந்திய டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா ஆகிய இருவரும் செய்யுமாறு கேட்டுகொள்கிறேன். மேலும், இதை அனைத்து ஐ.பி.எஸ் அதிகாரிகள் குறிப்பாக 40 வயதைத் தாண்டியவர்கள் செய்யுமாறு கேட்கிறேன். இந்திய மக்கள் ஒவ்வொருவரும் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். தினமும் ஏதேனும் ஒரு உடற்பயிற்சி செய்தால் நம் வாழ்வில் சில புதிய மாற்றங்களை உணரலாம். ” என பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.