சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் தேவசம் போர்டு கூறியுள்ளது.
இதுகுறித்த வழக்கை விசாரித்து வரும், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசமைப்புச்சட்ட அமர்வு, மாதவிடாய் சுழற்சியை காரணம் காட்டி, கோவிலுக்குள் நுழையும் உரிமையை பெண்களுக்கு மறுப்பது ஏற்புடையது அல்ல என குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவிலை நிர்வகித்து வரும் தேவசம் போர்டு, கோவிலின் தூய்மையை பராமரிப்பதற்காகவே, மாதவிடாய் சுழற்சியுள்ள 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை என தெரிவித்துள்ளது.
அதேசமயம், சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்பதை தாங்கள் எதிர்க்கவில்லை என கேரள அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கு விசாரணை வரும் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.