இந்திய ரயில்வே உணவகங்களின் (ஐஆர்சிடிசி) ஒப்பந்தங்களை தனியார் நிறுவனத்துக்கு வழங்கியதில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக தொடரப்பட்டுள்ள வழக்கில், குற்றம்சாட்டப்பட்டுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அழைப்பாணை அனுப்புவது தொடர்பான உத்தரவை தில்லி நீதிமன்றம் இன்று பிறப்பிக்க உள்ளது.
2004-ஆம் ஆண்டில் லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, ஐஆர்சிடிசி ஒப்பந்தங்களை தனியார் நிறுவனத்துக்கு முறைகேடாக வழங்கிய வகையில் அவரும், அவரது குடும்பத்தினரும் பலனடைந்ததாக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரி தேவி, மகன் தேஜஸ்வி ஆகியோருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சிபிஐ வாதாடியது. அதை பதிவு செய்துகொண்ட சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார், அவர்களுக்கு அழைப்பாணை அனுப்புவது தொடர்பாக இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறினார்.
இந்த வழக்கு தொடர்பாக, அப்போதைய ரயில்வே உணவக மேலாளரும், தற்போதைய ரயில்வே வாரியத்தின் கூடுதல் உறுப்பினருமான பி.கே.அகர்வாலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உயரதிகாரிகளிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்தது.
இந்த வழக்கின் குற்றப்பத்திரிகையில், லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினர் தவிர, முன்னாள் மத்திய அமைச்சர் பிரேம் சந்த் குப்தா, அவரது மனைவி சரளா குப்தா, ரயில்வே உணவகத்தின் அப்போதைய மேலாளர் பி.கே. அகர்வால், அப்போதைய நிர்வாக இயக்குநர் பி.கே. கோயல், அப்போதைய இயக்குநர் ராகேஷ் சக்úஸனா உள்ளிட்டோரது பெயரையும் சிபிஐ சேர்த்துள்ளது.
அவர்கள் தவிர, லாரா புராஜெக்ட்ஸ் (அப்போதைய டிலைட் சந்தைப்படுத்துதல் நிறுவனம்), சுஜாதா ஹோட்டல்ஸ் ஆகிய இரு தனியார் நிறுவனங்களும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையின்படி, ராஞ்சி, புரியில் உள்ள இந்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டில் இருந்த பிஎன்ஆர் ஹோட்டல், இந்திய ரயில்வே உணவகத்தின் (ஐஆர்சிடிசி) கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட்டது. பிறகு, அதன் பராமரிப்புக்கான ஒப்பந்தம் விஜய் கோச்சார், வினய் கோச்சார் ஆகியோர் உரிமையாளராக இருக்கும் சுஜாதா ஹோட்டல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.
அந்த ஒப்பந்தம் வழங்கிய நடவடிக்கையில், லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினர், முன்னாள் மத்திய அமைச்சர் பிரேம் சந்த் குப்தா, அவரது மனைவி சரளா குப்தா, ஐஆர்சிடிசி அதிகாரிகள் உள்ளிட்டோர் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.