கர்நாடகாவில் தனது தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க முயற்சி நடப்பதாக முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த 24-ம் தேதி கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹசன் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சரான சித்தராமையா, மக்கள் ஆசி கிடைத்தால் முதலமைச்சராக மீண்டும் பதவியேற்பேன் என தெரிவித்தார். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், சித்தராமையாவின் பேச்சு, கூட்டணியில் பிளவை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சித்தராமையாவின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் குமாரசாமி, தனது தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க சிலர் முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டினார். மேலும், செப்டம்பர் 3-ஆம் தேதி கர்நாடகாவில் புதிய முதலமைச்சர் பதவியேற்பார் என தகவல்கள் வருவதாகவும் அவர் கூறினார்.