பாரத் பந்த்: தமிழகத்தில் ‘நார்மல்’… புதுவையில் வாகனங்கள் இயங்கவில்லை!

இந்தியா உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

Bharat Bandh - 2026

சென்னை: பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இன்று பாரத் பந்த்-க்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின. சென்னை, சேலம், திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் பேருந்துகள் வழக்கம் போல் இயங்குகின்றன. உணவகங்கள், டீ கடைகள் உள்ளிட்ட வர்த்தக கடைகள் வழக்கம் போல் திறக்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் இன்று அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்திற்கு, கம்யூனிஸ்ட் கட்சிகள், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஆளும் சில மாநிலங்களில் ஓரளவு பாதிப்பு உள்ளது. ஆனால், பாஜக., ஆளும் மாநிலங்களில் பெரிய பாதிப்பு இல்லை.

சென்னையில் கோயம்பேடு புறநகர், மாநகர பேருந்து நிலையங்கள், பாரிமுனை பேருந்து நிலையம், பல்லவன் சாலை பணிமனை உள்ளிட்ட இடங்களில், வழக்கம்போல் பேருந்து இயங்குகின்றன. தேநீர் கடைகள், காய்கறி அங்காடிகள், பெட்ரோல் பங்குகள் உள்ளிட்டவை திறக்கப்பட்டுள்ளன. சென்னையில் 20,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சேலத்தில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகின்றன. கடைகள் திறக்கப்பட்டுள்ளன. காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பகுதி வழியாக காங்கிரஸ், மஜத., கூட்டணி ஆட்சி செய்யும் கர்நாடகா செல்லும் தமிழ்நாடு அரசு பேருந்துகள், முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக, சத்தியமங்கலகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. ஒருசில அரசு பேருந்துகள் மட்டும், பன்னாரி சோதனைச் சாவடி, தாளவடி வரை இயக்கப்படுகின்றன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிரான பாரத் பந்த் காரணமாக காங்கிரஸ் ஆட்சி செய்யும் புதுச்சேரியில் அரசு, தனியார் பேருந்துகள், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படவில்லை; ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முழுஅடைப்புப் போராட்டத்தால் புதுச்சேரியில் இன்று பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. திரையரங்குகளில் இன்று பகல் மற்றும் பிற்பகல் காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் ஓரளவு ஆதரவு காணப்பட்டது. புவனேஸ்வரில் காங்கிரஸ் கட்சியினர் ரயிலை மறித்தும் சாலையில் அமர்ந்தும் போராட்டம் நடத்தினர்.

தெலங்கானா மாநிலத்தில், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இடதுசாரி கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.