ஐபிஎல் 8 : மும்பை இந்தியன்ஸுக்கு முதல் வெற்றி

mumbai-indiansபெங்களூரு: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை போராடி வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஞாயிறு இரவு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற 16ஆவது லீக் சுற்று ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி, பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இதை அடுத்து பேட்டிங் செய்யக் களமிறங்கிய மும்பை வீரர்கள் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருப்பதை அறிந்து, விரைவாக ரன்களைக் குவித்தனர். லென்டில் சிமோன்சும், உன்முக் சந்தும் அதிரடி காட்ட, மும்பை அணி 12ஆவது ஓவரில் 100 ரன்களைக் கடந்தது. சிமோன்ஸ் 59 ரன்னில் ஆட்டம் இழந்த பின் ரோகித் சர்மா தனது அதிரடியைத் துவக்கினார். இதனால் ஸ்கோர் 200 ரன்களைக் கடந்தது. உன்முக் சந்த் 58 ரன்களும் ரோகித் சர்மா 42 ரன்களும் எடுத்தனர். இதனால் 20 ஓவரில் மும்பை அணி 7 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவர்களில் 76 ரன் சேர்த்தது மும்பை அணி. இதன் பின்னர் 209 ரன் என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூரு அணியில் துவக்கம் சரியாக அமையவில்லை. கிறிஸ் கெய்ல் 10 ரன்னிலும் விராட் கோலி 18 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். பின் வரிசையில் டிவில்லியர்ஸ் 11 பந்தில் 41 ரன் குவித்தார். இந்த ஐ பி எல் தொடரில் ஒரு மெகா சிக்ஸர் அடித்தார். அந்தப் பந்து 108 மீட்டர் தொலைவுக்குப் பறந்தது. பின்னர் டேவிட் வைஸ் 47 ரன் எடுத்தார். இருந்தாலும், பெங்களூரு அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 18 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தனது முதல் வெற்றியைப் பெற்றது.