மேற்குவங்க இளம் கிரிக்கெட் வீரர் மரணம்: சச்சின் இரங்கல்

ankit-cricketer-diedபெங்கால் அணியைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் அங்கித் ராஜ் கேஷ்ரி, களத்தில் பீல்டிங் செய்தபோது சக வீரருடன் மோதியதால் பலத்த காயமடைந்தார். பின்னர் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணமடைந்தார். அவரது மரணத்துக்கு வருத்தம் தெரிவித்து, சச்சின் டெண்டுல்கர் தனது இரங்கலையும் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமையன்று கொல்கத்தா ஜாதவ்புர் பல்கலைக் கழக வளாகத்தில் நடந்த மேற்கு வங்க கிரிக்கெட் வாரியம் நடத்திய போட்டி ஒன்றில், கிழக்கு வங்கம் மற்றும் பவானிபூர் ஆகிய அணிகள் மோதின. இந்தப் போட்டியில் 21 வயது கேஷ்ரி விளையாடவில்லை. 12 ஆவது ஆட்டக்காரராக இருந்தார். இந்நிலையில், கிழக்கு வங்க அணியின் அர்நாப் மண்டி என்கிற வீரருக்கு மாற்று வீரராக கேஷ்ரி, ஃபீல்டிங் செய்ய களத்தில் இறங்கினார். அப்போது, எதிர் அணி பேட்ஸ்மேன் அடித்த ஷாட்டை பவுலரும் டீப் கவர் திசையில் நின்று ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த கேஷ்ரியும் கேட்ச் பிடிக்க முயன்றனர். இருவரும் ஒருவரையொருவர் கவனிக்காமல் கடுமையாக மோதிக்கொண்டதில், மண்டலின் முழங்கால் கேஷ்ரியின் தலை மற்றும் கழுத்தில் மோதியது. இருவரும் பலமாக அடிபட்டு கீழே விழுந்தார்கள். கேஷ்ரி அப்போதே நினைவிழந்தார். அவர் வாயிலிருந்து ரத்தம் வந்தது. உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அருகே இருந்த மருத்துவமனைக்குச் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேறொரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், ஞாயிறு இரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உடனடியாகச் சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் திங்கள்கிழமை இன்று காலை அவர் மரணமடைந்தார். பிலிப் ஹியூஸ் மரணத்துக்குப் பின்னர், உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் மற்றொரு வீரர் காயமடைந்து உயிர் இழந்திருப்பது கிரிக்கெட் உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்நிலையில், கேஷ்ரியின் பரிதாப மரணத்துக்கு சச்சின் டெண்டுல்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் குறிப்பிட்டது…. அங்கித் கேஷ்ரியின் மரணத்தால் வருத்தம் அடைந்துள்ளேன். ஒரு நல்ல எதிர்காலம், ஆடுகளத்தில் உண்டான அசாதாரண சம்பவத்தால் தடைபட்டுள்ளது. அங்கித்தின் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு இந்த இழப்பைத் தாங்கிக்கொள்ள கடவுள் பலம் அளிக்கவேண்டும்.