விபத்தில் 5 பேர் பலி: மருத்துவமனையில் போதிய வசதி இன்மையால் கோபத்தில் வாகனங்களுக்கு தீ வைப்பு

siwan-school-van-accidentசிவான்: பீகாரில் சாலை விபத்து ஒன்றில் 5 பேர் பலியாயினர். இதில், மருத்துவமனையில் சிகிச்சைக்கு உரிய வசதி இல்லாமல், பலி எண்ணிக்கை அதிகரித்ததால், கோபத்தில் அங்கே வந்த வாகனங்களுக்கு பொது மக்கள் தீ வைத்தனர். பீகார் மாநிலம் சிவான் மாவட்டம் அருகே பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஆட்டோவும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதின. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே 3 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் போதுமான டாக்டர்கள் மற்றும் தேவையான மருத்துவ வசதிகள் இல்லை என்பதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மருத்துவமனையை சூறையாடினர். மேலும் மருத்துவமனையில் உள்ள பொருட்கள் மற்றும் ஆம்புலன்ஸ் உள்பட 9 வாகனங்களை தீ வைத்து எரித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் போராடி தீயை அணைத்தனர். பின்னர் படுகாயம் அடைந்தவர்கள் பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.