ஆம் ஆத்மி கூட்டத்தில் விவசாயி மரத்தில் ஏறி தற்கொலை: காங்கிரஸ் கண்டனம்

delhi-aap-farmer-suicideபுது தில்லி: மத்திய அரசின் நிலம் கையகப் படுத்தும் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று புது தில்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசினார். அப்போது, மோடி அரசு விவசாயிகளுக்கு எதிராகவும், பணக்காரர்களுக்கு ஆதரவாகவும் செயல்படுவதாக குற்றம் சாட்டினார். அப்போது, கேஜ்ரிவால் முன்னிலையில், ராஜஸ்தானைச் சேர்ந்த கஜேந்திர சிங் என்ற விவசாயி மைதானத்தில் இருந்த மரம் ஒன்றில் ஏறி தற்கொலை செய்ய முயன்றார். இருப்பினும் அவரை உடனடியாக ஆம் ஆத்மி தொண்டர்கள் கீழே இறக்கி மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தால் ஆம் ஆத்மி தொண்டர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விவகாரத்தில், விவசாயி தற்கொலையை ஆம் ஆத்மி தொண்டர்கள் தடுக்கத் தவறியதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இந்த சோகச் சம்பவத்துக்குப் பின்னரும் ஆம் ஆத்மி கட்சியினர் பேரணி நடத்தியது வெட்கக்கேடான செயல் என்று காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.