கோடையில் குடிநீர் வினியோகம் செய்வது குறித்து அமைச்சர் ஆய்வு

*குடிநீர் வினியோகம் குறித்து அமைச்சர் ஆய்வு: கோடையில் பற்றாக்குறையை சமாளிக்க தேவையான நடவடிக்கை*
சென்னை
பருவமழை பொய்த்துப்போனதால் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக குடிநீர் வாரியம் கூறியுள்ளது.
அமைச்சர் ஆய்வு
சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
தமிழகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுவரும் குடிநீர் வினியோகம் குறித்தும், உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் குடிநீர் வினியோகம் குறித்தும் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவான 12,522 மில்லியன் கன அடியில், 1,412 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே (11 சதவீதம்) இருப்பு உள்ளது. பருவமழை பொய்த்ததன் காரணமாக அனைத்து ஏரிகளிலும் நீர் இருப்பு குறைந்த அளவே இருந்தபோதிலும், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்ட குடிநீர் ஆதாரங்கள் மூலம் நாளொன்றுக்கு 550 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
நெய்வேலி குடிநீர்
சென்னை மாநகரின் கோடைகால குடிநீர் தேவையை சமாளிக்க ரூ.61 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பரவனாறு ஆற்றிலிருந்து நாளொன்றுக்கு 50 மில்லியன் லிட்டர் நீர் எடுப்பதற்கு ஏதுவாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நெய்வேலி நீர்ப்பரப்பு பகுதியில் தற்போது பயன்பாட்டில் உள்ள 10 ஆழ்துளை கிணறுகள் மூலம் நாளொன்றுக்கு சுமார் 10 மில்லியன் லிட்டர் நீர் எடுக்கப்பட்டு வீராணம் குடிநீர் குழாய் மூலம் சென்னைக்கு எடுத்துவரப்படுகிறது. மீதமுள்ள 35 ஆழ்துளை கிணறுகளை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முடிவுற்றதும் கூடுதலாக 20 மில்லியன் கனஅடி நீர் சென்னைக்கு எடுத்துவரப்படும்.
பரவனாறு ஆற்றுப்படுகையில் கூடுதலாக விசைப்பம்புகள் அமைக்கவும், மற்றும் நெய்வேலியில் 35 ஆழ்துளை கிணறுகளை புனரமைக்கவும் ரூ.5 கோடி வழங்கப்பட்டுள்ளது.
விவசாய கிணறுகள்
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி, தாமரைப்பாக்கம் ஆகிய இடங்களில் உள்ள சுமார் 300 விவசாய கிணறுகளை வாடகைக்கு அமர்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்போது 118 விவசாய கிணறுகளிலிருந்து நாளொன்றுக்கு 40 மில்லியன் லிட்டர் அளவிற்கு நீர் எடுக்கப்பட்டு வருகிறது.
அடுத்தமாத இறுதிக்குள், 300 விவசாய கிணறுகள் மூலம் நாளொன்றுக்கு சுமார் 100 மில்லியன் கனஅடி நீர் பெறப்பட்டு வினியோகம் செய்யப்படும். சென்னை மாநகரில் ஏற்கனவே 520 லாரிகள் வாடகைக்கு அமர்த்தப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 100 லாரிகளை வாடகைக்கு அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் 4,200 லாரி நடைகளின் எண்ணிக்கை 6,500 நடைகளாக அதிகரிக்கப்படும்.
ஆழ்துளை கிணறுகள்
சென்னை மாநகரில் கூடுதலாக 500 புதிய பிளாஸ்டிக் தொட்டிகள் நிறுவும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. சென்னை மாநகருடன் இணைக்கப்பட்டுள்ள பகுதிகளில் புதிதாக தேவைப்படும் ஆழ்துளை கிணறுகள் நிறுவுவதற்கு ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சோழவரம், செங்குன்றம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர் இருப்பில் மொத்தம் 409 மில்லியன் கன அடி நீரை உபயோகிக்க ஏதுவாக பம்புசெட்டுகள் மூலம் இறைத்து சென்னை மாநகருக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து ஏரிகளிலும் நீர்வற்றிப்போகும் சூழ்நிலை ஏற்பட்டால், காஞ்சீபுரம் மாவட்டம், மாமண்டூர், பாலூர் மற்றும் கருங்குழி ஆகிய தொலைதூரப் பகுதிகளிலிருந்து நாளொன்றுக்கு சுமார் 500 நடை லாரிகள் மூலம் 10 மில்லியன் லிட்டர் நீர் கொண்டுவரவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பருவமழை பொய்த்ததன் காரணமாக கோடைகாலத்தில் ஏற்படவுள்ள குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க பொதுமக்கள் அனைவரும் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமான முறையில் பயன்படுத்தவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.