குஜராத் சாமியாரிணி வீட்டில் கட்டுக்கட்டாக 2000 ரூபாய் புது நோட்டு

பனஸ்கந்தா: குஜராத்தில், பெண் சாமியார் வீட்டில் நடந்த அதிரடி சோதனையில், 24 தங்கக் கட்டிகளும், 1.2 கோடி ரூபாய் மதிப்பில், புதிய, 2,000 ரூபாய் நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
*அதிரடி சோதனை*
குஜராத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த, விஜய் ரூபானி முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தைச் சேர்ந்த, பெண் சாமியார் ஜெய் ஸ்ரீகிரி, 45, மீது, உள்ளூர் தங்கநகை வியாபாரி அளித்த புகார் அடிப்படையில், போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில், 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 24 தங்கக் கட்டிகளும், 1.2 கோடி ரூபாய் மதிப்புள்ள, புதிய, 2,000 ரூபாய் நோட்டுகளும் சிக்கின. ஏராளமான மது பாட்டில்களும், கைப்பற்றப்பட்டன.
*சர்ச்சை:*
செல்லாத நோட்டு திட்டம் அமலில் இருந்த டிசம்பரில், குஜராத்தில் நடந்த, ஒரு பாட்டு கச்சேரி நிகழ்ச்சி யில் பெண் சாமியார் ஸ்ரீகிரி பங்கேற்றார். அப்போது, பாடகர் மீது, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள, புதிய, 2,000 ரூபாய் நோட்டுகளை, ஸ்ரீகிரி வாரி இறைத்தார். ரூபாய் நோட்டு தட்டுப்பாடு நிலவிய சமயத்தில், புதிய நோட்டுகள், ஸ்ரீகிரிக்கு எவ்வாறு கிடைத்தன என்ற சர்ச்சை எழுந்தது.
*நடவடிக்கை:*
செல்லாத நோட்டு திட்ட காலத்தில், உள்ளூர் நகை வியாபாரியிடம், ஸ்ரீகிரி, ஐந்து கோடி ரூபாய்க்கு தங்க கட்டிகளை வாங்கிவிட்டு, பணம் தரவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, அந்த நகை வியாபாரி அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.