சசிகலாவுக்கு பதில் செங்கோட்டையன்: உறவினர்கள் தீவிர ஆலோசனை

சென்னை: அ.தி.மு.க., பொது செயலர் சசிகலாவின் முதல்வர் ஆசை கனவுக்கு, கவர்னர் முதல் கொண்டு, நிறைய தடங்கல் இருப்பதால், சசிகலாவுக்கு பதிலாக வேறு யாரையும் முதல்வராக கொண்டு வரலாமா என்ற ஆலோசனை, போயஸ் தோட்டத்தில் நடந்துள்ளது.
*யார் முதல்வர்?:*
இது குறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு எதிராக வந்தால், சசிகலாவுக்கு பதில் வேறு ஒருவரை முதல்வராக்கி விடலாம் என்ற முடிவுக்கு, சசிகலா குடும்பத்தினர் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அப்படியொரு சூழல் வந்தால், யாரை முதல்வராக்குவது என்பது குறித்து ஆலோசித்துள்ளனர். அதில், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளன. இதில், செங்கோட்டையனை, பலரும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
அதன் முதல்கட்டமாகத்தான், மதுசூதனனுக்கு பதிலாக, கட்சியின் அவைத் தலைவர் பதவியை செங்கோட்டையனிடம் வழங்கி உள்ளனர். ஜாதக ரீதியிலும், செங்கோட்டையனுக்கு நல்ல சூழ்நிலை இருப்பதால், அவரை முதல்வராக்குவதில், சசிகலா தரப்பினருக்கு சிக்கல்கள் இல்லை என்றும் கூறுகின்றனர்.