ஜெயலலிதா மரணத்தில் மர்மம் : பாஜக தமிழிசை

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-
ஒரு மருத்துவர் என்ற ரீதியில் எந்த ஒரு நோயாளியும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறும்போது ஒவ்வொரு நிகழ்வும் நிமிடத்திற்கு நிமிடம் பதிவு செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும்.
முக்கிய தலைவரான ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது உயிரோடு இருந்தவரைக்கும் புகைப்பட பதிவுகளை வெளியிட வேண்டாம் என்று சொன்னதை நியாயமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அவரது சிகிச்சையில் ஒப்புக்கொள்ள முடியாத பல நிகழ்வுகள் நடந்துள்ளன.
75 நாட்கள் சிகிச்சையில் இருந்த அவர் உடல்நிலை முன்னேறியதாகவும், சாப்பிடுகிறார் என்றும் தகவல்கள் வெளியிடப்பட்டன. அப்போது கூட புகைப்படம் வெளியிடாதது குழப்பத்திற்குதான் வழி வகுக்கும். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி தெளிவற்ற ஒரு நிலையே நிலவுகிறது. உயர்நீதிமன்றத்தில் கூட ஆஸ்பத்திரி நிர்வாகம் பதில் சொல்ல மறுக்கிறது.
உறவினர்கள் கேட்டால் மருத்துவ சிகிச்சை தொடர்பான அனைத்து விவரங்களையும் கொடுத்தே தீர வேண்டும். ஆனால் ரத்த சம்பந்தமானவர்கள் அமைதியாக இருப்பது ஏனோ?
எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை பெறுவதற்கும், எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை தெரிவிப்பதற்கும், பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் சசிகலா அடிக்கடி பேசினார்.
அதேபோல் ஜெயலலிதா நிலைகுறித்தும் தகவல்கள் தெரிவிக்க தயங்குவது ஏன்? முதல்-அமைச்சர் பதவி ஏற்க இருந்த நிலையில் லண்டன் டாக்டரை அவசரம் அவசரமாக அழைத்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார்கள். அது குழப்பத்தை தீர்க்கும் என்று நம்பினார்கள்.
மேலும் குழப்பத்தை அதிகரிக்கத்தான் செய்தது. எதையோ சொல்லி மக்களை சமாதானப்படுத்த நினைக்கிறார்கள் என்றுதான் நினைக்க வைத்தது. வேதா இல்லத்தில் இருந்து அப்பல்லோ வரை நடந்தது என்ன? ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டபோது அவர் எப்படி இருந்தார் என்ற எந்த விவரமும் தெரியாமலேயே உள்ளது.
75 நாட்கள் வெளி உலகத்துக்கு தெரியாமலேயே இருந்து இறந்து இருக்கிறார். இப்போது அவர் உயிரிழந்து விட்ட நிலையில் ஒரு முதல்-அமைச்சரின் சாவில் இருக்கும் சந்தேகத்தை கேட்கும் உரிமை மக்களுக்கு இருக்கிறது. சசிகலாவின் பினாமி அரசுதான் நடந்து வருகிறது.
குற்றமும், குற்றச்சாட்டும் அவர்கள் மீதுதான் இருக்கிறது. எனவே அதை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு உண்டு. அதை ஒப்புக் கொள்ளாதபட்சத்தில் சந்தேகம் மேலும் அதிகரிக்க தான் செய்யும்.
எந்த தவறும் நடக்கவில்லை என்றால் வெளிப்படையாக அறிவிப்பதில் ஏன் தயக்கம். எதையும் சொல்ல முடியவில்லை என்றால் சொல்ல முடியாத ஏதோ ஒன்று நடந்திருப்பதாக தானே நினைக்க தோன்றும். இதையெல்லாம் தெளிவுபடுத்த வேண்டும். தேவைப்பட்டால் உரிய முழு விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.