கான்பெரா: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், லீக் சுற்றின் 24வது போட்டியில், பி பிரிவில் இடம்பெற்றுள்ள அயர்லாந்து, தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 201 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை தோற்கடித்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி, முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்து களம் இறங்கியது. துவக்க வீரர் காக் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தபோதும், பின்னர் வந்த பிளெஸிஸ் உடன் அம்லா இணைந்து அதிரடி ஆட்டம் ஆடினர். அம்லா 128 பந்தில் 159 ரன் குவித்தார். டுபிளெஸிஸ் 109பந்தில் 109 ரன் எடுத்தார். பின்னர் வந்த டிவில்லியர்ஸ் 24 ரன்னும், மில்லர் 46, ரோசோவ் 61 ரன்னும் எடுத்து 50 ஓவரில் தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்புக்கு 411 ரன்கள் குவிக்க உதவினர். இதை அடுத்து 412 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்குடன் அயர்லாந்து அணி களத்தில் இறங்கியது. இமாலய இலக்கு என்பதால், அந்த அணியினர் பதட்டத்துடனேயே விளையாடினர். துவக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்து வந்த அயர்லாந்து அணி, முதல் 10 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்ததால், பெரும் சரிவுக்கு உள்ளானது. நடுவரிசையில் ஓ பிரைன் 48 ரன்னும், பெல்பிர்ன் 58 ரன்னும் எடுத்தனர். அந்த அணி 45 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 210 ரன்களே எடுத்தது. இதனால் தென்னாப்பிரிக்க அணி 201 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்கா 201 ரன்களில் அபார வெற்றி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari