பெங்களூர்: கர்நாடக உயர் நீதிமன்றத்தில், திமுக பொதுச் செயலர் அன்பழகன் தரப்பில் இன்று புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு விசாரணையை ஒத்திவைக்கக் கோரப்பட்டிருந்தது. பெங்களூர் தனி நீதிமன்றம், ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்தத் தீர்ப்பினை எதிர்த்து ஜெயலலிதா உள்பட 4 பேரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதி குமாரசாமி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. தனி நீதிமன்றத்தில் அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பவானி சிங்கே மேல்முறையீட்டு விசாரணையிலும் அரசு வழக்கறிஞராக ஆஜராகி வருகிறார். இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் தன்னையும் ஒரு தரப்பாக சேர்த்துக் கொள்ளக் கோரியும் தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் சார்பில் கர்நாடக நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த கர்நாடக நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனால், அன்பழகன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜராகி வாதாட அனுமதிக்கக் கூடாது என்றும், மேல் முறையீட்டு மனு விசாரணையில் தன்னையும் ஒரு தரப்பாக அனுமதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான விசாரணையை வருகிற 9–ந் தேதிக்கு உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்தது. இந்நிலையில் தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் கர்நாடக நீதிமன்றத்தில் இன்று புதிதாக மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில்… ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கக் கோரி தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவு வரும் வரை ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவுக்கு பதிலளிக்க 1 வார கால அவகாசம் தேவை என்று பவானி சிங் கூறியதையடுத்து இதன் மீதான விசாரணையை ஒரு வாரத்துக்கு தள்ளி வைத்தார் நீதிபதி.
சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு விசாரணையை ஒத்திவைக்கக் கோரி அன்பழகன் மனு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari