தமிழறிஞர் பேராசிரியர் சோ.சத்தியசீலன் காலமானார்!

சற்றுமுன் திருச்சி லைஃப் ஸ்டைல்
sathyaseelan1 - 2026

திருச்சி பேராசிரியர் சோ.சத்தியசீலன் வெள்ளிக்கிழமை நேற்று (9.7.2021) இரவு 11.45க்கு இறைவன் திருவடிகளில் கலந்தார். அன்னாரது இறுதி ஊர்வலம் இன்று (ஜூலை 10,, சனிக்கிழமை) மதியம் 2 மணிக்கு திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் இருந்து புறப்படும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

முனைவர் சோ சத்தியசீலன் 1934-ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் நாள் பிறந்தார். இவரது தந்தை பெயர் சோமசுந்தரம் பிள்ளை. பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்து, இலப்பைகுடிக்காடு உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றியவர். ஆர் எஸ் கே உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியப் பணி ஆற்றினார்.

sathyaseelan - 2026

திருச்சி தேசியக் கல்லூரி பேராசிரியராக, திருச்சி உருமு தனலட்சுமி கல்லூரியில் பேராசிரியராக, கல்லூரி முதல்வராக பணியாற்றியவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு உறுப்பினராக இருந்துள்ளார். கலைமாமணி விருது பெற்றவர். செட்டிநாட்டு அரசர் அண்ணாமலை செட்டியார் விருது, சொல்லின் செல்வர் விருது, தில்லி தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம் ஆகியவற்றில் விருதுகளை பெற்றவர். முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நெருக்கமானவராகத் திகழ்ந்தவர். தெய்வத் தமிழின் வீச்சை மேடை தோறும் கொண்டு சென்றவர்.

பட்டிமன்ற நடுவராக கோலோச்சியவர். கோவையில் நடைபெற்ற செம்மொழி தமிழ் மாநாட்டில் பட்டிமன்ற தலைவராகவும் எண்ணற்ற பட்டிமன்றங்களில் நடுவராகவும் திகழ்ந்தவர். உலக நாடுகளில் போற்றுதற்குரிய தமிழ்ப் பணி ஆற்றியவர். அமெரிக்க ஐக்கிய நாடுகள், அரபு நாடுகள், ஜெர்மனி, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் சென்று தமிழ் பணியாற்றியுள்ளார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டக் குழு உறுப்பினராக திகழ்ந்தவர். மதுரை உலகத் தமிழ் மாநாட்டில் உரையாற்றியவர். கம்பன் கழகம், திருவள்ளுவர் கழகம், வள்ளலார் பேரவை, திருச்சிராப்பள்ளி மாவட்ட தமிழ்ச் சங்கம் முத்தமிழ் மன்றம் திருவண்ணாமலை ஆகியவற்றின் தலைவராகவும், அருணகிரிநாதர் தமிழ் மன்றம் (திருவண்ணாமலை), சமரச சுத்த சன்மார்க்க சங்கத் தலைவராகவும் திகழ்ந்தவர்.

27 நூல்களுக்கு மேல் தமிழன்னைக்கு நூல் அணி புனைந்தவர். செவ்வந்திப் புராணம் (மலைக்கோட்டை வரலாறு) நூலின் உரையாசிரியர்.

புகழ் பல பெற்ற பேராளர் சோ சத்தியசீலன் மறைவுக்கு தமிழ் இலக்கியவாதிகள், அறிஞர்கள், அன்பர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடலுக்கு தமிழ் அறிஞர்கள் பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.