புது தில்லி ஜெயந்தி நடராஜன், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்தித்ததாக வரும் செய்திகள் பொய்யானவை, அவர் அமித் ஷாவை சந்திக்கவே இல்லை என்று பாஜக தரப்பில் கூறப்பட்டுள்ளது. சென்ற வருடத்தில் சுற்றுச்சூழல் துறை முன்னாள் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் அமித் ஷாவை மட்டுமல்ல.. எந்த ஒரு பாஜக தலைவரையும் சந்தித்துப் பேசவில்லை என்று அக்கட்சியின் தேசிய செயலர் ஸ்ரீகாந்த் சர்மா தெரிவித்துள்ளார். முன்னதாக, அமீத் ஷாவை சந்தித்த பிறகுதான் ராகுல் காந்தி மீது புகார் கூறுகிறார் ஜெயந்தி நடராஜன் என்று ஊடகங்களில் விவாதிக்கப்பட்டது. நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரின்போது பாஜக தலைவர் அமீத் ஷாவை ஜெயந்தி நடராஜன் ரகசியமாக சந்தித்துப் பேசியதாகவும், இதனால் அவர் பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டதாக அந்த விவாதம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், அவரை பாஜகவில் சேர்க்க சில முக்கியத் தலைவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும் ஊடகங்களில் செய்தி வெளியானது. நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரின்போது இவர்களின் சந்திப்பு நடந்ததாக தகவல் வெளியானபோதும், எதற்காக இந்த சந்திப்பு நடந்தது என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை. ஆனால் இந்த சந்திப்பு நடந்த நிலையில்தான் காங்கிரஸை விட்டு இன்று விலகுவதாக ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார். மேலும் ராகுல் காந்தி மீதும் புகார் கூறியுள்ள அவர், சோனியா காந்திக்கு அனுப்பிய கடிதத்தையும் பத்திரிகையாளர் மத்தியில் வெளிப்படையாக அளித்துள்ளார். அவரின் இந்தச் செயல் பல்வேறு யூகங்களைக் கிளப்பியுள்ளது. அவர் அமீத் ஷாவை சந்தித்ததாக வெளியாகியுள்ள தகவலும், அவரை பாஜகவுக்குள் கொண்டு வர சில முக்கியத் தலைவர்கள் விருப்பம் காட்டாமல் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன. இதற்கு, அவர் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தபோது எடுக்கப்பட்ட சில முடிவுகள் சர்ச்சைக்குரியதாக உள்ளதால் அவை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்பதால் ஜெயந்தியை சேர்ப்பதில் பாஜக அவசரம் காட்டாது என்பது காரணமாகக் கூறப்பட்டது. ஆனால் தனது முடிவுகளில் ராகுல் காந்தியின் தலையீடு இருந்ததாக ஜெயந்தி நடராஜன் வெட்ட வெளிச்சமாகக் கூறியிருப்பதால் ஜெயந்தியின் நோக்கம் என்ன என்பதும் கேள்விக்குரியதாகியுள்ளது.
அமித் ஷாவை ஜெயந்தி நடராஜன் சந்திக்கவில்லை: பாஜக
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari