தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிய குட்கா முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை தடையின்றி தமிழகத்தில் விற்பனை செய்ய அமைச்சர்கள், டி.ஜி.பி உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், மத்திய கலால் துறை அதிகாரிகள் ஆகியோர் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரை தொடர்ந்து சிபிஐ விசாரணக்கு உத்தரவிட வேண்டும் என்று திமுக எம்எல்ஏ அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் 2016ஆம் ஆண்டு குட்கா விற்பனையாளர் மாதவராவிற்கு சொந்தமான கிடங்கில் வருமான வரித்துறை நடத்திய ஆய்வில் சிக்கிய குறிப்புகள் மூலம் தெரிய வந்தது. இதை தொடர்ந்து குட்கா வழக்கு விவகாரம் சூடு பிடித்தது. மேலும், டெல்லியில் இருந்து தமிழகத்திற்கு ஏராளமான குட்கா பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இதற்காக 55 கோடி வரை ஹவாலா முறையில் பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதால் அதுகுறித்து விசாரிக்க வேண்டியுள்ளது எனவும் மத்திய கலால்துறை நீதிமன்றத்தில் வாதிட்டது.
அதேபோல், வருமான வரித்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு குட்கா கிடங்கு உரிமையாளர் 56 லட்சம் லஞ்சமாக கொடுத்ததை விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அப்போதைய டிஜிபி எழுதிய ரகசிய கடிதம், கடந்தாண்டு நவம்பர் 13ஆம் தேதி வி.கே.சசிகலா அறையில் இருந்து கைப்பற்றப்பட்டது.
இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக்கூடாது என ஆரம்பம் முதலே தமிழக அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, தமிழக அரசின் இந்த நடவடிக்கையே இந்த வழக்கை மேலும் தீவிரமாக விசாரிக்க தன்னை தூண்டுவதாக தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து தெரிவித்திருந்தார். மேலும், இந்த முறைகேட்டில் மற்ற மாநில அரசு அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளதால், சிபிஐக்கு மாற்றுவதில் தமிழக அரசுக்கு என்ன பிரச்சனை எனவும் கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம் இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சுகாதாரத்துறை ஆய்வாளர் சிவக்குமார் என்பவர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சிவக்குமார் சார்பில் முன்னாள் மத்திய அரசு தலைமை வழக்கிறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதாடினார். ஒரு அரசு அதிகாரி சார்பில் முன்னால் தலைமை வழக்கறிஞர் ஆஜரானது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. கடந்த மே 14 ஆம் தேதி இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில் சிபிஐ விசாரணைக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.