இன்று முதல் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ள இருப்பதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
திருச்சியில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்களின் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில், கடந்த 8-ம் தேதி நடைபெற்ற கோட்டை முற்றுகையிடும் போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. அதே வேளையில் போராட்டத்தை தடுக்கும் வகையில் கோட்டையை சுற்றிலும் முள்வேலி அமைத்து தடுப்புகளை பயன்படுத்தி மனித உரிமை மீறல் செயலில் ஈடுபட்டதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும், கோட்டை முற்றுகை போராட்டத்தின்போது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யவேண்டும், பணியாளர் பகுப்பாய்வு குழுவை ரத்து செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வைக்கப்பட்டன. இதனை தொடந்து நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.
கடந்த முறை நடைபெற்ற போராட்டத்தின் போது சென்னையை நோக்கி வந்த ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பல்வேறு எல்லைப்பகுதிகளில் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.