சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்துக்கான கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன. ஈபிஎஸ், ஓபிஎஸ் ஏற்கனவே அடிக்கல் நாட்டிய நிலையில் நினைவிடத்துக்கு கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2016 டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார். இதை தொடர்ந்து, டிசம்பர் 6ம் தேதி அவரது உடல் எம்ஜிஆர் நினைவிடத்தின் பின்புறம் நல்லடக்கம் ெசய்யப்பட்டது. இதை தொடர்ந்து, அந்த இடத்தில் ஜெயலலிதாவுக்கு ரூ.43.63 கோடி செலவில் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து நினைவிடத்திற்கான வரைபடம் தயாரிக்கும் பணிக்கான டெண்டர் விடப்பட்டது. இதில், 4 ஆர்க்கிடெக்ட் நிறுவனங்கள் விண்ணப்பித்தன. தொடர்ந்து விண்ணப்பித்த ஆர்க்கிடெக்ட் நிறுவனங்களிடமிருந்து வரைபடத்தை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் வரைபடத்தை தேர்வு செய்துள்ளனர். அந்த வரைபடத்திற்கு முதல்வர் அலுவலகம் ஒப்புதல் வழங்கியது.
ஜெயலலிதா நினைவு மண்டபம் முன்புற தோற்றம் பீனிக்ஸ் பறவை இறக்கை போன்று இடம் பெற்றிருக்கும். அதாவது, முன்புறத்தில் 20 அடியில் இரண்டு இறக்கைகள் பறப்பது போன்று உள்ளது. முன்புறத்தில் பிரமாண்ட தோற்றத்துடன் இருக்கும் வகையில் இதுேபான்று வடிவமைக்கப்பட்டுள்ளது. நினைவு மண்டப உட்புறத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் ஜெயலலிதாவின் அரசியல்-சினிமா சாதனைகளை விளக்கும் வகையில் அரிய புகைப்படங்களும் இடம் பெறுகிறது.