சாதி பேதம் இந்தியாவின் மிகப்பெரிய சாபம் என்று வேதனை தெரிவித்துள்ள ப. சிதம்பரம், சாதியால் தலித் மாணவர்கள் மிகுந்த கொடுமைக்கு ஆளாவதாக கூறியுள்ளார். சிலர் படம் வெளிவந்ததும் காணாமல் போய் விடுவதாகவும், சிலர் பேசுவதே புரிவதே இல்லை என்றும், ரஜினிகாந்த், கமல்ஹாசனை ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் மாணவர் பொறுப்பாளர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், மத்திய, மாநில அரசுகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டிய பொறுப்பு மாணவர்களுக்கு இருப்பதாக தெரிவித்தார். மாணவர்களால் மட்டுமே தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று குறிப்பிட்ட அவர், ரஜினிகாந்த், கமல்ஹாசனை மறைமுகமாக விமர்சித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், கல்வி அனைவருக்கும் அடிப்படை உரிமை என்று தெரிவித்தார். சாதி பேதம் இந்தியாவின் மிகப்பெரிய சாபம் என்று சாடிய அவர், மனு நீதியை காங்கிரஸ், திமுக கட்சிகள் எதிர்ப்பதாக கூறினார்