சேலம்-சென்னை பசுமை வழிச் சாலை: திருவண்ணாமலையில் திமுக இன்று ஆர்ப்பாட்டம்

சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டத்தைக் கண்டித்து திமுக சார்பில் திருவண்ணாமலையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது

இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், சென்னை – சேலம் எட்டு வழி பசுமைச் சாலை அமைக்கும் திட்டத்தை ஐந்து மாவட்ட விவசாயிகளும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் மிகக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். ஆனால், அதிமுக அரசோ மக்களின் பாதிப்பு பற்றிக் கவலைப்படாமல் காவல்துறை மூலம் அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

இத்திட்டத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்படும் மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையிலும், விளை நிலங்கள், மலைகள், நீர் ஆதாரங்கள் பாதிப்புக்கு உள்ளாவதைத் தடுத்து நிறுத்தும் வகையிலும் சேலம் மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.