பாமக நிறுவனர் ராமதாஸின் சமூக நீதிப் போராட்டத்தை கொச்சைப்படுத்திய பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மன்னிப்பு கோர வேண்டுமென பாமக தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு நேர்காணல் வழங்கிய தமிழிசை சவுந்தரராஜனிடம், சென்னை-சேலம் பசுமை சாலைக்கு மக்களிடையே எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்து எழுப்பப்பட்ட வினாவுக்கு, அவர் வழக்கம்போல மக்களை சமூக விரோதிகளாக சித்தரித்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.
சேலத்திற்கு செல்ல இரு சாலைகள் உள்ள நிலையில், பசுமை சாலை திட்டம் தேவையா என ராமதாஸ் கேட்டிருக்கிறாரே என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, அவரிடம் பதில் இல்லை என சுட்டிக்காட்டியுள்ள ஜி.கே.மணி, அதன் காரணமாக, 30 ஆண்டுகளுக்கு முன்பு ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இடஒதுக்கீடு போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் தமிழிசை தெரிவித்த கருத்துகள் கண்டிக்கத்தக்கது என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
108 சமுதாயங்களுக்கு சமூக நீதி கிடைப்பதற்கு காரணமாக இருந்த ராமதாஸின் போராட்டத்தை கொச்சைப்படுத்திய தமிழிசை சவுந்தரராஜன் பகிரங்க மன்னிப்பு கோரும் வரை தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.