பாபநாசம் உள்பட 3 அணைகளில் இன்று தண்ணீர் திறப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு உள்பட மூன்று நீர்த் தேக்கங்களில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், தூத்துக்குடி மாவட்டம் கடைமடைப் பகுதியில் ஸ்ரீவைகுண்டம்-மருதூர் அணைக்கட்டுகளின் மூலம் பாசனம் பெறும் கால்வாய்ப் பகுதிகளில் உள்ள பயிர்களைக் காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், பொது மக்கள்-கால்நடைகளின் குடிநீர்த் தேவைகளுக்காகவும் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு நீர்த் தேக்கங்களில் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தினைப் பொருத்து நீர் திறந்து விட விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

மூன்று நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தினைப் பொருத்து இன்று முதல் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரையிலான காலத்துக்கு 2,000 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளேன் என்று குறிப்பட்டுள்ளார்.