அரசு ஓய்வூதியர்களுக்கு மருத்துவக் காப்பீடு அட்டை இன்று விநியோகம்

புதுவை மாநிலத்தில் அரசு ஓய்வூதியர்களுக்கு மருத்துவக் காப்பீடு அடையாள அட்டை இன்று வழங்கப்படவுள்ளது.

புதுவை அரசில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டை வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

சுகாதாரத் துறை இயக்குநர், கருவூல இயக்குநர் மற்றும் அனைத்து வங்கி மேலாளர்கள், நியூ இந்தியா அசூரன்ஸ் நிறுவனத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மருத்துவக் காப்பீட்டுத் திட்டப் பயனாளிகளுக்கு நான்கு பிராந்தியங்களிலும் விரைவில் அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டது.

புதுச்சேரியில் சுகாதாரத்துறை அமைச்சர் தலைமையில் சட்டப்பேரவை வளாகத்தில் இன்று நடைபெறும் கூட்டத்தில் பயனாளிகள் பங்கேற்று மருத்துவ காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம். அன்று வர இயலாத பயனாளிகள் புதுச்சேரி நேரு வீதியில் உள்ள நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் உரிய ஆவணங்களுடன் சென்று பெற்றுக் கொள்ளலாம். காரைக்காலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், மாஹே, ஏனாமில் மண்டல அதிகாரி அலுவலகத்திலும் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 8148281814 என்ற செல்லிடப்பேசியில் தொடர்பு கொள்ளலாம்.