மதுரையில் இன்று காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

மதுரையில் இன்று காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் பங்கேற்கிறார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் வீ.கார்த்திகேயன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் எஸ்.திருநாவுக்கரசர் பங்கேற்கிறார்.

அப்போது வாக்குச்சாவடி வாரியாக நிர்வாகிகளை மாநிலத் தலைவர் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார். கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவு, மகிளா காங்கிரஸ், எஸ்.சி, எஸ்.டி. பிரிவு, மனித உரிமை பிரிவு, சேவாதளம், பட்டதாரிகள் பிரிவு மற்றும் கட்சியின் நிர்வாகிகள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், வட்டார நிர்வாகிகள் என அனைத்துத் தரப்பினரும் கலந்து கொள்ள வேண்டும் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது.