காஞ்சீபுரம் மாவட்டத்தில் 42 கிராமங்களில் 8 வழி சாலைக்கு இன்று நிலம் அளவீடு

சென்னை – சேலம் இடையே ரூ.10 ஆயிரம் கோடி செலவில் 8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்காக சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்படும் பணி நடந்து வருகிறது. 40 ஆயிரம் வீடுகள் இடிக்கப்படுகின்றன. 8 மலைகளும் உடைக்கப்படுகின்றன.

8 வழி பசுமை சாலைக்காக நிலம் அளவீடு செய்யும் பணிகள் கடந்த மாதம் 18-ந் தேதி தொடங்கியது. இதுவரை தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அளவீடு செய்யும் பணிகள் முடிந்துள்ளன.

நில அளவீட்டை பொறுத்தவரை 90 சதவீத பணிகள் முடிந்து விட்டன. இன்னும் 10 சதவீத பணிகளே உள்ளது.

இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 8 வழிச்சாலைக்கான நிலம் அளவீடு செய்யும் பணி இன்று தொடங்குகிறது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் தாம்பரத்தை அடுத்த கரசங்கால் பகுதியில் இருந்து தொடங்கும் இந்த சாலை ஒரத்தூர், நாட்டரசன்பட்டு, வடக்குப்பட்டு, ஆப்பூர், குருவன்மேடு, பாலூர், அரும்புலியூர், ஆனம்பாக்கம், மணல்மேடு, ஒழுகரை, இளநகர் வழியாக சென்று மாவட்ட எல்லையான பெருநகர் வழியே திருவண்ணாமலை மாவட்டத்துக்குள் நுழைகிறது.

ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் தாம்பரம் அருகேயுள்ள கரசங்கால் பகுதியில் இருந்து நிலம் அளவீடு செய்யும் பணிகள் தொடங்குகின்றன. வருவாய்த்துறை மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபட உள்ளனர்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் நிலம் அளவீடு செய்வதற்கு ஏற்கனவே எதிர்ப்பு கிளம்பி விட்டது. உத்திரமேரூர், மணல்மேடு, ஒழுகரை, இளநகர், பெருநகர் விவசாயிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

4 ஏக்கர் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் நிலத்தின் மத்தியில் 8 வழிச்சாலை அமைகிறது. எனவே அந்த விவசாயிக்கு ரோட்டின் இருபுறமும் துண்டு துண்டாக விவசாய நிலம் மீதமாகிறது. இந்த 2 நிலத்திலும் விவசாயம் செய்ய சுமார் 10 கி.மீ. தூரம் வரை சுற்றி செல்ல வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நிலம் அளவீடு செய்வதை எதிர்த்து ஏராளமான விவசாயிகள் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். தொடர்ந்து மனு கொடுத்தும் வருகிறார்கள். அவர்களிடம் கலெக்டர் பொன்னையா, “உங்களிடம் கருத்து கேட்டு உங்கள் சம்மதத்தை பெற்றுத் தான் நிலத்தை கையகப்படுத்துவோம் என்று கூறி வருகிறார்.

ஆனாலும் தொடர்ந்து விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தபடியே உள்ளனர். காஞ்சீபுரம் மாவட்ட விவசாயிகளும் கடந்த 6-ந்தேதி அரசாணை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலம் அளவீடு செய்யும் பணியை தடுக்க எந்த மாதிரியான போராட்டம் நடத்துவது என்பது தொடர்பாக விவசாயிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். மேலும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கலாம் என்று ஏற்கனவே உளவுத்துறை எச்சரித்துள்ளது.

எனவே போராட்டத்தை முன் கூட்டியே தடுத்து நிறுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அதற்காக முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நில அளவீடு பணியை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் தொடங்குகிறார்கள். ஆனாலும் அதையும் சந்தித்து போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அளவீடு செய்த நிலத்தில் கல் பதிக்கும் பணி முடிந்து விட்டது. தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் கல் பதிக்கும் பணி நடந்து வருகிறது.

சேலம் மாவட்டத்தில் 29 கிராமங்களில் 36 கிலோ மீட்டர் தூரத்துக்கு பசுமை வழிச்சாலை அமைக்கப்படுகிறது. தர்மபுரி மாவட்டத்தில் 22 கிராமங்களில் 54 கிலோ மீட்டர் தூரத்துக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 கிராமங்களில் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 74 கிராமங்களில் 122 கி.மீ. தூரத்துக்கும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் 42 கிராமங்களில் 59 கிலோ மீட்டர் தொலைவுக்கும் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் 1846 விவசாயிகளிடம் 439 ஹெக்டேர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. திருவண்ணாமலையில் 74 கிராமங்களில் 7237 பேரின் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளன. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 42 கிராமங்களில் 1300 ஏக்கர் அளவுக்கு தனியார் மற்றும் அரசு நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன.

8 வழிச்சாலைக்கு நிலம் அளவீடு செய்ய விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் நிலம் அளவீடு செய்வதை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். விவசாய நிலங்களில் பெண்கள் உருண்டு புரண்டு அழுதனர். காலம் காலமாக உழைத்து பாதுகாத்த நிலம் பறி போகிறதே என்று பெண்கள் கண்ணீர் வடித்தனர்.

எதிர்ப்பு கிளம்பிய கிராமங்களில் எல்லாம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் நிலம் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர். குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக எதிர்ப்பு கிளம்பியது. பல இடங்களில் விவசாயிகள் தற்கொலை முயற்சியிலும் ஈடுபட்டனர். பல கிராமங்களில் நில அளவீடு பணியின்போது ரே‌ஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை அதிகாரிகள் முன்பு வீசி எறிந்தும் பொது மக்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். சிலர் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றினார்கள்.

கடந்த 6-ம் தேதி 5 மாவட்ட தலைநகரங்களில் 8 வழி பசுமை சாலைக்கான அரசாணையை எரித்தும் விவசாயிகள் போராட்டம் நடத்தி கைதானார்கள்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.