திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிக்க வரும் 5 ஆம் தேதி ஜனாதிபதி சென்னை வருகை தர உள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு மூப்பு மற்றும் உடல் நல பிரச்சினைகளுக்காக சென்னை கோபாலபுரத்தில் உள்ள வீட்டிலேயே டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த 28-ந்தேதி அதிகாலை அவரது ரத்த அழுத்தத்தில் பிரச்சினை ஏற்பட்டது. உடனடியாக அவர் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்த பின்னர் அவரது ரத்த அழுத்தம் சீரானது. ஆனால் 29-ந்தேதி அவரது உடல் நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது.
ஆனால் தொடர்ந்து மருத்துவ நிபுணர்கள் அளித்து வருகிற சிகிச்சையால், அவரது உடல்நிலையில் ஆச்சரியப்படத்தக்க அளவில் நல்லதொரு முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. கருணாநிதிக்கு கல்லீரல் பிரச்சினை இருப்பதாகவும் தொடர்ந்து ஆஸ்பத்திரியில் தங்கி இருந்து சிகிச்சை பெறப்போவதாகவும் கடந்த 31-ந் தேதி வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில் காவேரி ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்தது. இன்று தொடர்ந்து 7-வது நாளாக கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல் நலம் குறித்து தேசிய கட்சிகளின் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் தொடர்ந்து மருத்துவமனைக்கு நேரில் வந்து கேட்டறிந்து வருகின்றனர். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் நேரில் வந்து நலம் விசாரித்துச் சென்றனர். இந்த நிலையில், இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க சென்னை வருகிறார்.