பாஜக., தேசியத் தலைவர் அமித் ஷா தமிழகத்துக்கு வருகிறார்.. அதுவும், கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகிறார் என்று ஒரு தகவல் வெளியானது. இது பாஜக.,வினர் மட்டுமல்ல, திமுக.,வினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏற்கெனவே தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கே பாஜக.,வினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அமித் ஷாவின் வருகை குறித்த தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, அமித் ஷா தமிழகத்துக்கு திமுக., நிகழ்ச்சிக்கு செல்லப் போவதில்லை என்று வந்த தகவல் தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக டிவிட்டரில் கூறினார்.
இந்தச் செய்தியும் தமிழக பாஜக.வில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அமித் ஷா தமிழகம் வரப் போறாரா? என்று ஆச்சரியமாகக் கேள்வி எழுப்பியுள்ளார், திமுக., தலைவராக இருந்த கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கும் தமிழக பாஜக, தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன்!
திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அமித் ஷா வருகை குறித்து தங்களுக்கு தகவல் வரவில்லை என கூறினார். மேலும், அவரது வருகை குறித்து இதுவரை மேலிடத்தில் இருந்து எந்தத் தகவலும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்றும் ஆச்சரியப் பட்டபடி கூறினார்.
இதே போல், பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜாவும், புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய போது, அமித்ஷா வருகை குறித்து தங்களுக்கு தகவல் இல்லை. கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும் என்று கூறினார். இப்படி முரண்பாடான தகவல்களால், பாஜக., வட்டாரம் கலகலத்துக் கிடக்கிறது. அதற்கு முன் சமூக வலைத்தளங்களில் பாஜக., அபிமானிகளே கூட அமித் ஷா வருகையை வைத்து பாஜக., தமிழகத் தலைமையை பிரித்து மேய்ந்துவிட்டார்கள்!