நடிகர் விஷால் தனது ரசிகர்கள் நற்பணி மன்றத்தை விஷால் மக்கள் இயக்கம் என மாற்றியுள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் விஷால் நடித்த இரும்புத்திரை படத்தின் நூறாவது நாள் விழா, விஷாலின் பிறந்த நாள் விழா மற்றும் விஷால் மக்கள் இயக்கம் தொடக்க விழா ஆகியவை முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டன. முதலில் இரும்புத்திரை படத்தின் நூறாவது நாள் விழா நடைபெற்றது. படக்குழுவினருக்கு விருது வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து படக்குழுவினர், ரசிகர்கள் உள்ளிட்டோருக்கு மத்தியில் நடிகர் விஷால் தனது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடினார்.
இதனைத் தொடர்ந்து தனது ரசிகர்களைச் சந்தித்து கலந்துரையாடிய விஷால் அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். விஷால் மக்கள் இயக்கம் அமைப்பின் கொடியையும் விஷால் அறிமுகப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் பணி செய்யவே புதிய அமைப்பை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
முதலமைச்சர் பதவி தனது நோக்கம் அல்ல என்ற அவர், தற்போதைய அரசியல் கட்சிகள் மக்கள் பணியை முறையாகச் செய்யாததாலேயே அரசியல் கட்சி தொடங்கும் எண்ணம் ஏற்படுவதாகவும் அவர் கூறினார். திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ரசிகர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.