அதிமுகவை மீண்டும் சசிகலா குடும்பத்திற்குள் கொண்டுபோய் திணிக்க டிடிவி தினகரன் முயற்சி செய்வதாகவும், அது எந்த காலத்திலும் வெற்றி பெறாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
மதுரை திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்திடம், அமைச்சரவையில் மாற்றம் இருக்கலாம் என சொல்லப்படுவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அமைச்சரவை மாற்றம் என்பது முதலமைச்சரின் தனிப்பட்ட அதிகாரம் என்பதால், அதுபற்றி கருத்துச் சொல்ல விரும்பவில்லை என ஓபிஎஸ் பதிலளித்தார். ஆர்.கே.நகரைப் போல திருப்பரங்குன்றம், திருவாரூரிலும் வெற்றிபெறுவோம் என டிடிவி தினகரன் கூறியது பற்றியும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, மிகப்பெரிய தர்மயுத்தத்தை நடத்தி அந்த குடும்பத்தில் இருந்து அதிமுக விடுதலை பெற்றிருப்பதாக ஓபிஎஸ் தெரிவித்தார்.
டிடிவி தினகரன் மீண்டும் அதிமுக-வில் சேர்த்துக் கொள்ளப்படுவாரா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அந்த கேள்வியை தவிர்க்குமாறும், அதற்கு தன்னிடமிருந்து பதிலைப் பெற முடியாது என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் கூறினார்.