வெடிக்கும் மக்கள் தொகை – சிக்கலில் இந்தியா

 

 

சுற்றுச்சூழல் மாசுபடுதலில் தொடங்கி புவி வெப்பமடைதல் வரை பல சிக்கல்கள் பூதாகரமாக கிளம்பி நாம் வாழும் பூமியை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இப்போது அந்த சிக்கலுடன் மக்கள் தொகையும் சேர்ந்துள்ளது.
 
மனித சரித்திரத்தில் முன் எப்போதும் இருந்ததைவிட, தற்போது மிக அதிக அளவில் அதிகரித்துள்ளது. மனிதன் காலத்தை கணக்கிடத் தொடங்கிய கி.பி. முதல் வருடத்தில் உலக மக்கள் தொகை வெறும் 20 கோடிதான்.
 
ஒவ்வொரு நூற்றாண்டுக்கும் ஒரு கோடி என்ற விகிதத்தில் அதிகரித்து கி.பி.1000-ம் ஆண்டில் 31 கோடியாக உயர்ந்தது. ஆயிரம் ஆண்டுகளில் வெறும் 11 கோடிதான் அதிகரித்தது. உலக மக்கள் தொகை 100 கோடியை  எட்டியது 1820-ல் தான்.
 
 
மனிதன் பூமியில் தோன்றிய காலத்தோடு ஒப்பிட்டால் இது மிக நீண்ட காலம். இந்த 100 கோடி என்ற அளவை எட்ட மனிதனுக்கு ஒன்றரைக்கோடி வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது. ஆனால், அதன்பின் மக்கள் தொகை வளர்ச்சி நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு விஸ்வரூபம் எடுத்தது.
 
நூறு கோடியை எட்டத்தான் ஒன்றரைக்கோடி ஆண்டுகள் தேவைப்பட்டன. ஆனால், இந்த 100 கோடி 700 கோடியாக உயர வெறும் 191 வருடங்களே தேவைப்பட்டுள்ளன. மக்கள் தொகை 700 கோடியை தொட்டது 2011-ம் ஆண்டில். இன்றைய நிலவரப் படி உலகின் மக்கள் தொகை 732 கோடி. 2024-ம் ஆண்டில் இது 800 கோடியைக் கடந்து விடும்.
 
 
மக்கள்தொகை வளர்ச்சி இப்படி நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு மளமளவென்று உயர்வதற்கு காரணம் மருத்துவத் துறையின் வியத்தகு வளர்ச்சிதான். மனித சரித்திரத்தில் மக்கள் கொத்துக்கொத்தாக அழிந்து போனதற்கு போர்களோ, யுத்தங்களோ காரணம் அல்ல. நோய்கள்தான் காரணம்.
 
காலரா, பிளேக், மலேரியா போன்ற கொள்ளை நோய்கள் வந்தால் போதும், கிராமம் கிராமமாக, நகரம் நகரமாக மக்கள் செத்துமடிவார்கள். 20-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட மருத்துவப் புரட்சி, நோய்களால் மக்கள் இறந்து போவதை குறைத்தது. எந்த வகையான நோயானாலும் உடலைவிட்டு விரட்டியடித்தது. உயிரைப் பிடித்து வைக்கும் மருத்துவம் மனிதனை காப்பாற்றியது. மனித ஆயுளும் நீண்டது.
 
1950-ல் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி ஆண்களின் சராசரி ஆயுள் 40 வயதாகவும், பெண்களின் வயது 38 ஆகவும் இருந்தது. 2001-ல் ஆண்களின் ஆயுட்காலம் 63 ஆகவும், பெண்களின் ஆயுட்காலம் 65 ஆகவும் உயர்ந்தது. 2010-ல் ஆண், பெண் இருவரது சராசரி ஆயுட்காலமும் 75 ஆண்டாக உயர்ந்துள்ளது.
 
ஆயுள் நீண்டதால் உலகம் முழுவதும் முதியோர்களின் எண்ணிக்கை கூடியது. இறப்பு விகிதம் வெகுவாக குறைந்தது. இப்போதைய கணக்குப்படி உலகில் வருடத்திற்கு 20 கோடி பிறப்புகள் நிகழ்கின்றன. ஆனால், இறப்பு என்பது வெறும் 8 கோடிதான். இதனால்தான் ஜனத்தொகை கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டே போகிறது.
 
இதே வேகத்தில் மக்கள் பெருக்கம் இருந்தால், இன்னும் 50 ஆண்டுகளில் உலக மக்கள் தொகை 1,200 கோடியைக் கடந்து விடும். எல்லா உயர்வுக்குமே ஒரு உச்சம் இருப்பதுபோல் இதற்கும் உச்சம் இருக்கிறது. அதைக் கடந்து செல்ல முடியாது. மக்கள் தொகையும் அப்படிதான்..!
 
இந்த உலகம் 1,400 கோடி மக்களைத்தான் தாங்கும். அதற்கு மேல் தாக்குபிடிக்க முடியாது. அந்த தாக்குப் பிடிக்க முடியாத அளவை நோக்கித்தான் உலகம் படு வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறது. இந்த அபாயமும் இந்தியாவிற்குத்தான் மிக அதிகம். 2028-ல் இந்தியா சீனாவை பின்னுக்குத் தள்ளிவிட்டு மக்கள்தொகையில் முதல் நாடக முன்னுக்கு வந்துவிடும்.
 
அபாயம் அதுவல்ல..! வேறு..!
 
நமது உடலில் எல்லா பகுதியும் ஒரே மாதிரி சீராக வளர்ந்தால் அது வளர்ச்சி. ஒரு இடம் மட்டும் அபரிவிதமாக வளர்ந்தால் அதற்கு பெயர் கட்டி.  எப்போது வேண்டுமானாலும் கட்டி உடைந்து பாதிப்பை ஏற்படுத்தலாம். மக்கள் பெருக்கமும் அப்படிதான்.
 
 
அமெரிக்காவிலும் கனடாவிலும் இப்போது உள்ள மக்கள்தொகையே 2050-லும் நீடிக்கும். பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யாவில் 12 % மக்கள் தொகை குறையும். அப்படியானால், ஆபத்தான மக்கள்தொகை பெருகி வெடிக்கப் போவது இந்தியா, சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நைஜீரியா ஆகிய நாடுகளில். 
 
வீக்கம் என்பது இந்தியாவிலும் இந்தியாவைச் சுற்றியும் மட்டுமே நிகழ்கிறது. 2011-ம் ஆண்டின் கணக்குப்படி உலகின் மக்கள்தொகை 700 கோடி. இந்தியாவில் 121 கோடியே 7 லட்சம் (121,01,93,422), தமிழ்நாட்டில் 7 கோடியே 21 லட்சம் (7,21,38,958) என்ற அளவில் உள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை 2028-ல் 145 கோடி என்ற இலக்கை எட்டி உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா முதலிடத்திற்கு வந்துவிடும்.
 
உலக மொத்த நிலப்பரப்பில் இந்தியாவின் பங்கு வெறும் 2.5 % தான். ஆனால் மக்கள்தொகையிலோ உலக மக்களில் 16 % மக்களை தன்னோடு வைத்துள்ளது. ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் எத்தனை மக்கள் வாழ்கிறார்கள் என்பதுதான் மக்கள்தொகை அடர்த்தி என்று சொல்லப்படுகிறது. உலக அளவில் ஒரு சதுர கி.மீ. பரப்பளவில் சராசரியாக 52 பேர் வாழ்கிறார்கள். இந்தியாவில் 382 பேர், தமிழ்நாட்டில் 555 பேர், அதுவே சென்னையில் என்றால் ஒரு ச.கி.மீ. 27,000 பேர் வசிக்கிறார்கள். அடர்த்தி இந்தியாவிதான் அதிகம். 
 
 
இப்போதே இந்தியாவின் மக்கள் நிலை படுமோசம். நாட்டில் வாழும் பாதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் இல்லை. உணவு, மருந்து, வீடு, சுகாதாரம் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. உலக வங்கி அறிவித்திருக்கும் புதிய மதிப்பீட்டின்படி சர்வதேச வறுமை கோட்டிற்கு  கீழே வாழும் இந்திய மக்களின் எண்ணிக்கை 45.6 கோடி. அதாவது ஒரு நாளைக்கு 1.25 அமெரிக்க டாலர் கூட வருமானம் இல்லாதவர்கள். உலக ஏழைகளில் 33 % பேர் இந்தியாவில்தான் வசிக்கிறார்கள். அதாவது உலகின் மூன்று ஏழைகளில் ஒருவர் இந்தியர். 
 
2050-ல் இந்தப் பற்றாக்குறை இன்னும் பன்மடங்கு அதிகரிக்கும். இத்தனைக்கும் இந்தியாதான் உலகில் முதன் முதலாக பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தும் குடும்பக் கட்டுப்பாடு முறையை கொண்டுவந்த நாடு.  
 
1952-ல் குடும்பக்கட்டுப்பாடு பற்றிய சர்வதேச கருத்தரங்கு இந்தியாவில் நடந்தது. அன்றைய மத்திய சுகாதார அமைச்சராக இருந்த ராஜகுமாரி அம்ரித்கவுர் இதில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார். குழந்தைப் பிறப்பை தடுப்பது அன்று கொடும் பாவமாகக் கருதப்பட்டது. 
 
 
அந்த மாநாட்டில் கலந்துக்கொண்டு பேசிய அன்றைய துணை ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனின் பேச்சுதான் இந்திய அரசையே உலுக்கிப் போட்டது. 
 
“குழந்தைகளை, பெண்களின் கர்ப்பப்பைக்கு கடவுள்தான் அனுப்பி வைக்கிறார். அவர் விருப்பத்தில் குறுக்கிட நமக்கு என்ன உரிமையுள்ளது? என்று சிலர் கேட்கிறார்கள். குழந்தையைக் கொடுக்கும் அதே கடவுள்தான் நமக்கு அறிவையும் கொடுத்திருக்கிறார். பயன்படுத்துவதற்குத்தான் அறிவு. எதிர்கால விளைவுகளையும், பெண்களின் ஆரோக்கியத்தையும் கருதி நாம் இதை செய்தாக வேண்டும். இதற்கு அறிவை பயன்படுத்தாவிட்டால் மனித இனம் அழிந்துவிடும்.” என்றார். 
 
இந்தியர்களின் மனசாட்சியை உலுக்கிய பேச்சு அது! உடனே நாட்டின் எல்லா அரசு மருத்துவமனைகளிலும் குடும்பக் கட்டுப்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த பிரதமர் நேரு தீர்மானித்தார். இதற்காக 65 லட்சம் ரூபாயை ஒதுக்கினார். குழந்தைப் பிறப்பைக் கட்டுப்படுத்தும் முதல் முயற்சியை இந்தியா தொடங்கியது. 
 
 
அரசின் இந்த முயற்சியால் ஆறேழு குழந்தைகளை பெற்றெடுத்த இந்தியர்கள் ஒன்று இரண்டோடு நிறுத்திக்கொள்ள தொடங்கினார்கள். அப்படியிருந்துமே 1947-ல் வெறும் 30 கோடியாக இருந்த இந்தியாவின் மக்கள்தொகை இப்போது 121 கோடியைத் தாண்டிவிட்டது. ஒருவேளை பிறப்பை கட்டுப்படுத்தாமல் விட்டிருந்தால் இந்தியாவின் நிலை, நினைத்தாலே தலை சுற்றுகிறது…!