சென்னை: தமிழக சட்டமன்ற சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, அவ்வாறு தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும் வரும் 30ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் 3-வது நீதிபதி சத்தியநாராயணன், இந்த தகுதி நீக்க தீர்ப்பை அளித்ததுடன், சபாநாயகர் முடிவில் குற்றம் காண்பதற்கில்லை என்று கூறி, தீர்ப்பளித்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக தங்க தமிழ்ச் செல்வன் கூறியுள்ளார்.
முன்னதாக, மேல்முறையீடு செய்யலாமா வேண்டாமா அல்லது தேர்தலில் மீண்டும் போட்டியிடலாமா என்பது குறித்தெல்லாம் 18 பேரும் முடிவு செய்வார்கள் என்றும், தாம் ஒன்றும் சொல்ல இயலாது என்றும் கூறியிருந்தார் டிடிவி தினகரன்.