மற்ற மதத்தினரை இழிவுபடுத்த மாட்டோம்..! உறுதி கொடுத்தால் மட்டுமே மதக்கூட்டங்களுக்கு அனுமதி!

சற்றுமுன் நெல்லை மதுரை
madurai high court - 2026

மதுரை: மதம் தொடர்பான நிகழ்ச்சிக்கு அனுமதியளிக்கும்போது, ‘மற்ற மதத்தினர் மற்றும் அவர்களின் வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள் குறித்து இழிவாகப் பேசமாட்டோம் என்ற உத்தரவாதத்தை நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் போலீசார் பெற வேண்டும், அப்படி எழுதிக் கொடுத்தால் அனுமதி கொடுப்பது பற்றி முடிவு செய்யலாம்’ என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது..

கன்னியாகுமரி காஞ்சிரகோடு தேவஆசீர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், காஞ்சிரகோடு அரசு புறம்போக்கு நிலத்தில் நற்செய்திக் கூட்டம் நடத்த மார்த்தாண்டம் போலீசாரிடம் அனுமதி கோரினோம். அதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர். அதை ரத்து செய்து அனுமதி கொடுக்க வேண்டும் மேலும், கூட்டத்துக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்… என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.சேஷசாயி, இம்மாதிரி வழக்குகளில் நீதிமன்றம் தலையிடாது. இதுபோன்ற வழக்குகளில் முடிவெடுக்கக் கூடிய அரசு அதிகாரிகள் தன்னிச்சையாக, உள்நோக்குடன் செயல்பட்டதற்கு முகாந்திரம் இருந்தால் நீதிமன்றம் தலையிடும்! வெளியில் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு, நீதிமன்றம் கண்களை மூடிக் கொண்டிருக்காது என்று கூறினார்.

மேலும், அனைத்து மதத்தினரும் அவரவரர் மதத்தை பின்பற்ற அரசியலமைப்புச் சட்டம் உரிமை அளித்துள்ளது. மதம் தொடர்பான கூட்டங்களின் போது அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள மதச்சார்பின்மைக்கு பங்கம் ஏற்படாத வகையில், நீதிமன்றம் சில நிபந்தனைகளை விதிக்கும்.

பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்காமல் அவரவர் மதம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது. இதுபோன்ற மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி வழங்கும்போது, சம்பந்தப்பட்ட மதத்தைச் சேர்ந்த பொறுப்பாளரிடம், ‘பிற மதத்தினர் மற்றும் அவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசமாட்டோம். மீறினால் சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு கட்டுப்படுவோம்,’ என எழுத்துப் பூர்வமாக உத்தரவாதம் பெற வேண்டும்.

இந்த வழக்கில் மனுதாரர் மனுவை பரிசீலித்து அனுமதி அளிக்க வேண்டும். பிற மதத்தினர் மற்றும் அவர்களின் வழிபாட்டு முறைகள், நம்பிக்கைகள் குறித்து குறைவாக மதிப்பிட்டு பேசமாட்டோம் என்ற உத்தரவாதத்தை நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் போலீசார் பெற வேண்டும் என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.