திமுக பொருளாளர் துரைமுருகன் அவர்களின் காட்பாடி வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை செய்ததை தொடர்ந்து அவர்களின் சிமெண்டு குடோனில் மறைத்து வைக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் நேற்று காலை பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

காட்பாடி, காந்திநகர் பகுதியில் உள்ள திமுக சட்டமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் பொருளாளருமான துரைமுருகன் வீட்டில் நேற்று நள்ளிரவு 3 மணி முதல், காலை 8.30 மணி வரை வருமான வரித்துறை சோதனை நடந்து வந்தது.

வருகின்ற மக்களவைத் தோ்தலில் வேலூா் தொகுதியில் திமுக பொருளாளா் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். இந்த நிலையில் துரைமுருகன் வீட்டில் வாக்காளா்களுக்கு பட்டுவாடா செய்யப்படுவதற்காக, பணம், பரிசுப்பொருட்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதனைத் தொடா்ந்து வேலூா் மாவட்டம் காட்பாடி அருகே காந்திநகா் பகுதியில் அமைந்துள்ள துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள், தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் இரவு 10 மணிக்கு வந்ததாகவும், அப்போது துரைமுருகன், கதிரானந்த் வீட்டில் இல்லை என அவர்களிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் துரைமுருகனுக்கு நெஞ்சு வலி உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பதால் இந்த நேரத்தில் சோதனை செய்ய வேண்டாம். நாங்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்கிறோம். நீங்கள் காலையில் சோதனையைத் தொடங்குங்கள் என்று துரைமுருகன் தரப்பில் அதிகாாிகளுக்கு கடிதம் வாயிலாக தொிவிக்கப்பட்டது.

இருப்பினும் அந்த கோாிக்கையை ஏற்க மறுத்த அதிகாாிகள் சோதனையிடும் நோக்கில் துரைமுருகனின் வீட்டு வாயிலில் காத்திருந்தனர். அவா்களுடன் அப்பகுதி திமுக தொண்டா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனைத் தொடா்ந்து அப்பகுதியில் காவல் துறைனா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடத் தொடங்கினர்.

இந்நிலையில் நள்ளிரவு 3 மணியளவில் துரைமுருகன் வீட்டுக்குள் சென்ற அதிகாரிகள் தொடர்ந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை செய்து வந்தனர். அப்போது ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை என தகவல்கள் கூறுகின்றன. எனினும் தொடர்ந்து சோதனை நடைபெற்றது.

மேலும், சித்தூர் சாலையில் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிரானந்திற்கு சொந்தமான கிங்க்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இதற்கிடையில் வேலூர் திமுக-வின் முக்கிய நிர்வாகிகள் வீட்டுகளிலும் சோதனை நடைபெற்றது.

அதனை தொடர்ந்து, இன்று காலை 8.30 மணியளவில் சோதனை நிறைவுப் பெற்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. துரைமுருகன் வீட்டுக்கு வெளியில் திமுக-வினர் பலர் இருந்ததால் பரபரப்பு ஏதேனும் நிகழாமல் தடுக்க, சோதனை முடித்துக் கொண்ட அதிகாரிகளில் சிலர் முன்னதாக வாகனத்தில் ஏறி புறப்பட்டுச் சென்றனர். அவர்களை தொடர்ந்து மற்றவர்களும் புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...