நடிகை புவனேஸ்வரியின் திரையரங்கை அபகரித்தவர் மீது வழக்கு

actress-bhuvaneshwari710710 சென்னை: சென்னையில் நடிகை புவனேஸ்வரியின் திரையரங்கை அபகரித்தவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் வசித்து வரும் நடிகை புவனேஸ்வரி தனது சொந்த ஊரான கோவை மாவட்டம், அன்னூரில், 64 சென்ட் நிலத்தில் வீடு மற்றும் அஷ்டலட்சுமி என்ற பெயரில் திரையரங்கு ஒன்றை வைத்துள்ளார். கடந்த 2012இல் புவனேஸ்வரி, தனது வீட்டை விற்பதற்காக அன்னூர் அருகே உள்ள தென்னம்பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணியத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தெரிகிறது. இதற்காக நடந்த பத்திரப் பதிவின் போது, புவனேஸ்வரியின் வீட்டுக்கு அருகிலிருந்த திரையரங்கத்தையும் சேர்த்து, போலி கையெழுத்திட்டு, தனது பெயருக்கு சுப்பிரமணியம் பத்திரப் பதிவு செய்து மோசடி செய்ததாகத் தெரிகிறது. சுப்பிரமணியம் ஏமாற்றி வாங்கிய திரையரங்கின் மதிப்பு ரூ.3 கோடி என தெரியவந்தது. இதை அடுத்து, இது குறித்து புவனேஸ்வரி கடந்த 2012ல் அன்னூர் போலீஸாரிடம் புகார் கொடுத்தும் அந்தப் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வில்லை. இந்நிலையில், அவர் தமிழக முதல்வரின் தனிப் பிரிவுக்குப் புகார் மனு கொடுத்தார். இந்தப் புகார் மனு கோவை மாவட்ட காவல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து அன்னூர் போலீஸார், புவனேஸ்வரி அளித்த புகாரின் பேரில் சுப்பிரமணியத்தின் மீது மோசடி உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். அவரிடம் இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.