விவசாயி தற்கொலை ஒரு எச்சரிக்கை மணி: மு.க.ஸ்டாலின்

சென்னை: தில்லியில், விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துக்குப் பிறகாவது அதிமுக தனது முடிவை மறுபரிசீலனை செய்யுமா? என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், எழுதிய குறிப்பில், நிலம் கையகப்படுத்தும் மசோதாவை எதிர்த்து நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சி பேரணியில் பங்கேற்று கஜேந்திர சிங் என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்ட செய்தி கேட்டு மனம் உடைந்து போனேன். அவரது குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். நிலம் பொருளாதாரம் சார்ந்த சொத்து மட்டுமல்ல விவசாய குடும்பங்களுக்கு வாழ்வாதரத்திற்குமான ஆதாரமாகும். பணத்தைக் கொடுத்து ஈடுகட்ட முடியாத அளவிற்கு நிலம் என்பது அந்த நில உரிமையாளர்களின் உணர்வோடு தொடர்புள்ளது. இந்த தற்கொலை மத்திய அரசுக்கு எச்சரிக்கை மணி. ஆகவே உரிய முறையில் செயல்பட்டு விவசாயிகள் விரோத நில எடுப்பு மசோதாவை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். மக்கள் விரோத மசோதாவிற்கு ஆதரவு அளிப்பதை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன் – என்று கூறியுள்ளார்.