பாட்டு பட்ட பாடு

பாட்டு பட்ட பாடு கழுதை மேய்த்தாலும் அரசாங்கத்தில மேய்க்கனும்… இது பழமொழி… பாட்டு பாடி பழகனும்னா அரசாங்க போட்டில கலந்து பாடனுங்கறது புதுமொழி…. நம்ம கதையோட நாயகன் கண்ணனோட அலுவலகத்துல பாட்டு போட்டி வந்தது…. வருடாவருடம் நடைபெறும் போட்டிதான். சென்னையில இருக்கற அத்தனை அரசாங்க அலுவலகத்திலுருந்தும் பாடறவங்க வருவாங்க. பிரச்சினை என்னன்னா இந்த போட்டில ஹிந்தி பாட்டு பாடனும்…. அதுவும் ஆண்கள் முகேஷ், கிஷோர் குமார் மற்றும் பெண்கள் லதா மங்கேஷ்கர் பாட்டுதான் பாடனும். எப்படி பாடினாலும் பரவாயில்லை, இவங்க பாட்டைத்தான் பாடியாக வேண்டிய சூழ்நிலை. பெண் குரலுக்கு ஆள் ரொம்ப எளிமையா கிடைச்சுடுச்சு…. ஆனா பாருங்க… இந்த ஆண் குரலுக்குத்தான் ரொம்ப DEMAND. நல்ல பாடற கண்ணனோட நண்பனுக்கு வேற முக்கியமான வேலை, போட்டி நடைபெறும் நாளில் முக்கிய வேலை வருவதால போட்டியில கலந்துக்க முடியாத சூழ்நிலை… யாரை அனுப்பறது போட்டிக்கு…. கண்ணனோட மேற்பார்வையாளர் ஆள் பிடிக்க ஆரம்பித்தார். கொஞ்சம் பாடத்தெரிந்த கண்ணனின் சக ஊழியரை பாட சொல்லி கேட்டார். அவருக்கு என்ன மனநிலையோ தெரியலை… எப்புவும் பிறர் கேட்கறத்துக்கு முன்னாடியே நான் பாடறேன்னு ஒத்துக்கறவர் சொன்னார்…. இப்பல்லாம் நான் போட்டில பாடறதில்லை… பாட்டு எழுதுறது…. பாட்டுக்கு மெட்டு அமைச்சு…. இசை அமைச்சு…. நானே அதை பாடறதுதான் எனக்கு புடிச்சிருக்கு… என்னை பாட சொல்லி தொந்தரவு செய்யாதீங்க என்றார். இதை கேட்டதும் கண்ணனோட மேற்பார்வையாளர் வேற ஒருத்தரை பாட சொல்ல முயற்சியெடுக்க ஆரம்பித்தார். அவர் முயற்சி செய்த ஒவ்வொருத்தரும் மறுக்க மறுக்க கண்ணனோட மேற்பார்வையாளர் முகம் சுருங்கி போனது. அவங்க படும் கஷ்டத்தைப்பார்த்துட்டு கண்ணனால சும்மா இருக்க முடியலை. பல நிகழ்ச்சி பார்த்த கண்ணன் பாட்டு பாடும் தரம் ஓரளுவுக்கு அறிந்ததால் தானே பாட முடிவு செய்தார்… அந்த முடிவுக்கு அவர் பின்னாடி ரொம்ப வருத்தப்பட்டார்… அதைப்பற்றி பிறகு பார்ப்போம்….. கண்ணன் பாடறேன்னு சொன்னதும் அவரோடு வேலை செய்பவர்கள் அனைவருக்கும் ரொம்ப மகிழ்ச்சி…. கண்ணனுக்கு வாய் கொஞ்சம் அதிகம்…. தன்னடக்கத்தோட சொல்லனும்னா ரொம்ப அதிகம். எல்லோருக்கும் என்ன எண்ணம்… இவன் எங்கே பாடப்போறான்… எல்லோரையும் கிண்டல் கேலி செய்து மகிழும் இவனை நாமும் கொஞ்ச நாள் கேலி செய்ய வாய்ப்பு கிடைத்து என்று எண்ணி கண்ணனுக்கு முகேஷின் பாட்டை பாட வாய்ப்பு அளிக்கப்பட்டது. கண்ணனுக்கு மனதில் தன்னைப்பற்றி தெரிந்தாலும் அலுவலகத்தில் ரொம்ப உதார்விடுபவர் என்பதால் அதை வெளியே சொல்லாமல் திருவள்ளுவர் சொன்ன உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்பதெற்கு ஏற்றவாறு முகேஷின் இக் தின் பிக் ஜாயேகா என்ற அருமையான பாடலை பாட… மன்னிக்கனும் பாட முயற்சி செய்ய முடிவு செய்தார். ரொம்ப சரியாக சொல்லனும்னா கொலை செய்ய முயற்சி செய்ய முடிவு செய்தார். கண்ணன் பெயர் பாட இருக்கின்றது என்று தெரிந்ததும் அவருக்கு பல போன் கால்கள்… என்னடா நீ பாடுவேன்னு எங்களுக்கு தெரியாது… இவ்வளவு நாள் எப்படி நீ பாடமா இருந்தே… இதற்கெல்லாம் அவர் பதில் அவருக்கே தான் பாடுவேன்றது இன்னிக்குத்தான் தெரியும் என்பது… கண்ணனின் நண்பர்கள் வட்டம் மிகவும் பெரியது… காட்டு தீயை விட வேகமாக பரவியது அவர் பாட்டை கொல்ல போற செய்தி… வீட்டிலும், அலுவலகத்திலும் அக்கறை உள்ள சிலர் வேண்டாம் என்று தடுத்தாலும் பலர் கொடுத்த நீ நல்லா பாடுவேன்ற பொய் போதை அவரை தடுமாற வைத்தது… கலி காலம் அல்லவா… பொய் வாய்மையை வென்றது. இது கண்ணனின் தன்மான பிரச்னை ஆனது…. பாட்டை ஒலி வடிவமாக எடுத்து தன் செல் போன், கம்ப்யூடரில் வைத்து பாட ஆரம்பித்தார். வீட்டிலும்…. அலுவலகத்திலும்… தன்னோட மற்றோறு பரிமாணம் பாடகன் ஆனது. 40 வருடம் மேடையேறி பாடாத அவர் பாட முயற்சி எடுத்தது வீணாய் போகக் கூடாது என்ற வைரக்கியத்துடன் karaoke யோடு பாட்டு பாட முடிவு செய்தார். பாட்டில் அவருக்கு நல்லா பாட வந்த இடம் லலாலல்லா என்ற கோரஸ் மட்டும்தான்… மத்த எல்லா இடமும் பிரச்சினைதான்… சரி வேற பாட்டு பாடலாம்னு பார்த்தா அதெல்லாம் இதைவிட கஷ்டமாக இருந்தது.. சரி முடிவு செய்து விட்டோம்…. பார்ப்போம் ஒரு கை.. என்று பாட்டை பாட முடிவு செய்தார். காலை, மாலை என்று பெருமாள் பெயரை ஜபம் செய்வதுபோல இந்த பாட்டை பாட ஆரம்பித்தார்… அவர் மனைவி சொன்னால் இதுக்கு நாலு ஸ்லோகம் சொன்னால் புண்ணியமாவது கிடைக்கும்… ஏன் இப்படி பாட்டு பாடி பல பேரின் பாவத்தை சம்பாதிக்கீறீங்க என்று.. அவர் அவளிடம் சொன்னார் – முன் வைத்த காலை பின் வைக்கும் பழக்கம் தன் பரம்பரைக்கே கிடையாது என்று. அவள் சொன்னால் நான் சொல்லட்டா எத்தனை முறை நீங்க மாறியிருக்கீங்க என்றதும். வடிவேலு மாதிரி அது நேத்து… நான் இன்னிக்கு சொன்னேன் என்ற டயலாக்கை வீசி விட்டு தன் பாட்டு பாடும் முயற்சியை தொடர்ந்தார். வீட்டில் இருக்கும் அவருடைய பெரிய பையனுக்கு கூட பாட்டு நல்லா வந்துவிட்டது… அவருடைய மண்டைக்குத்தான் சரியா ஏறலை… தன் வீட்டில் குடித்தனம் இருப்பவர்கள் கூட கோரஸை சரியா பாடி… ஸார் அந்த பாட்டில கோரஸ் மட்டும் அருமையா பாடறீங்க என்று கேலி செய்ய ஆரம்பித்தனர். பழக பழக வரும் இசை என்பதை நம்பித்தான் அவர் பாட முயற்சி செய்தார். ஆனால் அது கொஞ்சமாவது பாட தெரிஞ்சவங்களுக்குத்தான் என்பது கண்ணனுக்கு புரிய ஆரம்பித்தது. உண்மைய சொல்லனும்னா பாடறது அவருக்கு சுகமாத்தான் இருந்தது… ஆனா அவர் பாடறது பிறருக்கு சுமையா இருந்தது என்பதை அவரால் உணர முடிந்தது. பாடறது தனக்கு சரிப்பட்டு வராது போல தெரிய ஆரம்பித்தது. இருந்தாலும் தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தனை போல ஹிந்தி பாட்டென்ற வேதாளத்தை தன் முதுகில் சுமக்க தொடங்கினேன். சுமந்தது வீண் போகவில்லை… கொஞ்சம்… கொஞ்சமா… பாட தொடங்கினார்…. ரொம்ப நல்லா பாடலைன்னாலும் சுமாரா பாட ஆரம்பிச்சார்…. இதன் நடுவில் அவர் பாடுவதை கேட்டே தீரவென்றுமென்ற முடிவோட அவரோட அலுவலகத்தில் வேலை செய்பவர்களும், அவரது மேலாளரும் முடிவு செய்தனர். கண்ணன் அதுக்கு சில நிபந்தனை போட்டார். மாலை 6 மணிக்கு மேலதான் பாடுவேன்… எல்லா கதைவையும் முடினபிறகுதான் பாடுவேன். ஒரே ஒரு முறைதான் பாடுவேன்… அதற்கு அவர் மேலாளர் கேட்டார் மற்ற நிபந்தைனைகள் எல்லாம் சரி, அதென்ன ஒரே ஒரு முறைதான் பாடுவேன் என்பதென்பது… அவர் சொன்னார் நீங்க என்னை எத்தனை தர பாட சொன்னாலும் அதே தப்புதான் வரும்… என் தரம் அவ்வளவுதான். என்று… பிண்ணனி இசையோடு கண்ணன் பாடினதும்… அவரோட வேலை செய்யும் அனைவருக்கும் கொஞ்சம் வருத்தம்தான். என்னாட இவனை கொஞ்ச நாள் இதை வைத்து ஓட்டாலாமென்று பார்த்தால் சுமாரா பாடறானே…. பரிசு வேற வாங்கிட்டா… இவனை சமாளிக்க முடியாதே… என்ற மனக்கவலைகள் அவர்களை சூழ்ந்து கொண்டதை உணர முடிந்தது. அதை பார்த்தும் கண்ணன் சொன்னார் பாடி முடித்தும் தனக்கு முண்ணனி இசையமைப்பாளரிடமிருந்து வாய்ப்புகள் வரும் என்று… அவர் நண்பன் தைரியமாக சொன்னான் நினைப்புதான் பொழப்பை கெடுக்கும் என்று. அவர் சொன்னார்… ஏன் அவசரப்படறே…. நான் இன்னும் முடிக்கலே… அவங்க சொல்வாங்க…. நாங்க மிருகங்களை வைத்து படம் பண்ணப்போறோம் நீங்க அதுல கழுதைக்கு குரல் குடுக்க முடியுமா என்று…. இதை கேட்டதும் அனைவரும் இன்னிக்குத்தான் இவன் உண்மை பேசறடான்னு கண்ணனை பாராட்டினாங்க… பாடும் தினமும் வந்தது… ஸிடியில பாட்டை எழதி கண்ணனா எடுத்துக்கொண்டார். பிறரின் பாடும் தரத்தைப்பற்றிய தன் கணிப்பு தவறென்று உணரும் நிலை வந்தது கண்ணனுக்கு… முதலில் பாடியவர் அசத்தினார். அடடா… தனக்கு மேல ஒருத்தர் என்று நினைக்கும் போது 16வதாக பாட வரும் தனக்கு முன்னால் பாடிய பலர் அருமையாக பாட கண்ணனுக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது. பிறரை கிண்டல் செய்வதற்கும்… தாமே அந்த நிலைக்கு தள்ள படுவதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்தார். கண்ணனுக்கு ஒரு திறமை உண்டு தன் மனைவியை தவிர மற்ற எல்லாரையும் தன்னிடம் திறமை உண்டு என்று எளிமையாக ஏமாற்றிவிடுவார். அப்படி தன்னை நம்பும் ஒருவர்தான் போட்டிக்கு வந்த நடுவர்களில் ஒருவர். கண்ணனுக்கு நன்றாக தெரிந்தவர். அடடா தன்னுடைய சாயம் வெளுத்துடும் போலிருக்கே என்று வருத்தப்பட ஆரம்பிச்சார். பல வருடமா கட்டி காத்த கோட்டை பாட்டு மேல வந்த ஆசையால பாழா போயிடுமோயென்ற பயம் அவரை சூழ்ந்தது. அதுக்கும் மேல பிரச்சனைன்னு வந்தா எல்லாம் சேர்ந்து வரும் என்பார்கள்…. பட்ட காலிலேயே படும் என்பார்கள். ஆனால் பிரச்னை கண்ணன் பெரிய பையன் படிக்கும் பள்ளியிலிருந்து அவர் பாட ஆரம்பிக்கும்போது வந்த போனின் மூலம் வந்தது… கண்ணன் சொன்னார் நான் முக்கியமான போட்டியில் இருக்கிறேன், தயவுசெய்து 10 நிமிடம் கழித்து கூப்பிடுங்கள் என்று. சொல்லிவிட்டு தன் ஸிடியை தந்து பாட்டை போடச்சொன்னால் பாட்டின் இசை வரவில்லை. கண்ணனால் நன்கு அறிந்த கூட்டத்தின் ஒரு பகுதி இதுதான் நல்ல சந்தர்ப்பமென்று கூறி பாடதே என்றனர்.. மறு பகுதி அடுத்தாதாக பாடு என்றது…. ஆசை யாரை விட்டது…. சரி ஸிடியை சரி செய்து பாடுகிறேன் என்று கூறிய போது மீண்டும் பள்ளியிலிருந்து போன் கால். என்ன ஸார் உங்க பையன் காலை உடைத்துக் கொண்டிருக்கிறான்…. நீங்க போனை எடுக்க மாட்டேன் என்கிறீர்கள் என்று. கண்ணன் தன் பையனிடம் பேசினேன்…. என்னடா எப்படி இருக்கே… அவன் அந்த வலியிலும் கேட்டான்… அப்பா பாடிட்டியா என்று… நான் இன்னும் பாடலடா… கிளம்பி வரட்டுமா என்று கேட்க… இல்லப்பா நீ அங்க பாடிட்டு வா… நான் வீட்டில பட்ட வேதனை அனைவரும் படட்டும்னான். மேலும் சொன்னான் நான் என் நண்பனோட அப்பாவோட நம்ம வீட்டுக்கு போறேன்னு. கண்ணன் அக்கறையோட சொன்னார் வீட்டுக்கு போய் ஜஸ் வைச்சுக்கோ… 30 நிமிடத்துல வீக்கம் போலேன்னா அம்மாவோட போய் எக்ஸ்ரே எடுத்துக்கோ…. சரிப்பா என்றான் அவரின் மகன்… பாட போன கண்ணனுக்கு மீண்டும் சத்யசோதனை. ஸிடி மீண்டும் வேலை செய்யவில்லை. அதை சரி செய்ய எடுத்த பல முயற்சிகள் வீணானது… தன்னை பாடமால் இருக்க கடவுள் கொடுத்த பல வாய்ப்பை பயன்படுத்த தவறி, ஆனது ஆகட்டும் என்று பிண்ணனி இசையில்லாமல் பாட முடிவு செய்தார். பிறரையே டென்ஷன் செய்து பழகிய அவருக்கு டென்ஷன், பிரஸர் என்றால் என்ன என்று தெரிந்தது. 15 நாட்கள் காலை, மாலை, இரவு என்று நன்றாக மனப்பாடம் செய்த பாட்டு மறந்து, பார்த்து பாட ஆரம்பித்தார். எப்படியோ பாடி முடித்தார். கண்ணன் தெளிவாக அனைவரிடமும் தனக்கு பரிசு கிடைக்காததைப் பற்றி சொன்னார், இங்கு தன்னை விட பலர் நன்றாக பாடிய ஒரே காரணத்தினால்தான் தனக்கு பரிசு பெறும் வாய்ப்பை கிடைக்கவில்லையென்று. ஆனாலும் எல்லா பிரச்சனைகளுக்கும் நடுவே அவர் பாடியதால் பலரின் பாராட்டு கிடைத்தது. வெளியே மழைவேறு பெய்ய ஆரம்பித்தது… அனைவரும் உன் இசைமழையில் நனைய வருணபகவானே வந்துவிட்டார் என்றனர். நல்ல முயற்சி… நீ நல்லா பயிற்சி செய்தா பரிசு நிச்சயம் கிடைக்குமென்று உசுப்பிவிட்டார்கள். டென்ஷனில் பாதி மட்டுமே சரியாக பாடியதால் முழுமையாக அதை படுத்திவிட்டால்தான் திருப்தி என்ற நிலையை கண்ணன் எடுத்து அடுத்த விழாவில் தான் இந்த பாட்டை சரியாக பாடுவேன் என்று சபதம் எடுத்தார்.. தன் முயற்சியை பற்றி அவருடைய மேலாளர் சொன்ன வார்த்தைகள் நீங்கள் பாடியது நல்ல தைரியமான முயற்சியென்று சொன்னது மட்டும் கண்ணனின் நினைவில் நன்றாக பசுமரத்தானி போல் பதிந்து நின்றது……. பாட்டு கண்ணனிடம் பட்ட பாடு இதோட நிற்காது.