அரபிக் கல்லூரி பேராசிரியர்கள் சாலைவிபத்தில் மரணம்: ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்க கோரிக்கை

பள்ளப்பட்டி அரபிக் கல்லூரி பேராசிரியர்கள் சாலை விபத்தில் மரணமடைந்த சம்பவத்துக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி அனுதாபத்தை தெரிவித்துள்ளது. மேலும், தமிழக அரசு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளது.
இதுக்குறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் இயங்கிவரும் மக்தூமியா அரபி கல்லூரியின் பேராசிரியர்களும், மாணவர்களும் நேற்று கொடைக்கானலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு திரும்பும்போது திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டை அருகே  அவர்கள் பயணித்த கார், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மக்தூமியா அரபி கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் வாகன ஓட்டுனர் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே அகால மரணமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது, மிகவும் வேதனையை ஏற்படுத்துகிறது. இவ்விபத்தில் பலியான ஆலிம் பெருமக்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மற்றும் மக்தூமியா அரபி கல்லூரியை சேர்ந்தவர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களது மறுமை வாழ்வு வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்.
மேலும் இவ்விபத்தில் அகால மரணமடைந்த வரலாற்று சிறப்புமிக்க மக்தூமியா அரபி கல்லூரியின் பேராசிரியர்கள் உட்பட அனைவரின் குடும்பத்திற்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும் என தமிழக அரசை எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.