மீனாட்சி அம்மன் கோயிலில் மீண்டும் தீ: பக்தர்கள் வேதனை!

Published:

மதுரை:

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. பிரதான தெற்கு கோபுரம் அருகே உள்ள பவர் ரூமில் திடீரென தீப்பிடித்ததில் அந்த அறையில் இருந்த மின் சாதனங்கள் எரிந்து நாசமாயின.

கடந்த வாரம்தான் மதுரை மீனாட்சியம்மன் கோயில் கிழக்கு கோபுரத்தை ஒட்டிய ஆயிரங்கால் மண்டப கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீரவசந்தராயர் மண்டப பகுதி தீயின் வெப்பத்தால் சேதமடைந்தது.

இந்நிலையில், வியாழக்கிழமை நேற்று மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தெற்கு கோபுரம் அருகே உள்ள கோயில் இணை ஆணையர் அலுவலகத்தை ஒட்டி, கோயிலுக்கான குங்கும தயாரிப்புக் கூடம் உள்ளது. அதன் அருகில் பவர் ரூம் உள்ளது. கோயிலுக்கான மின் விநியோகம் இங்கிருந்துதான் செயல்படுத்தப் படுகிறது.

நேற்று மாலை, திடீரென மின் அறையில் இருந்து புகை வருவதைக் கண்ட குங்கும தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள், பதற்றத்துடன் சென்று பார்த்தனர். அப்போது அறையில் மின்கசிவு ஏற்பட்டு, தீப்பற்றி, மின் சாதனங்கள் தீயில் எரிந்தபடி இருந்தன.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக மின் இணைப்பைத் துண்டித்தனர். இதனால் பெரும் தீவிபத்து தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவத்தால், மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, மீனாட்சி அம்மன் கோயிலில் தீவிபத்து ஏற்பட்ட பகுதியிலுள்ள கடைகளை, வெள்ளிக்கிழமை இன்று பகல் 12 மணிக்குள் காலி செய்ய உத்தரவிட்டுள்ளது. கோயில் பாதுகாப்பு கருதி இத நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும் என்று அது கூறியிருந்தது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img