சென்னை: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி கிரைம் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், பள்ளிக்கல்வித் துறை ஊழியர் ஒருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், காலி பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு தேர்வு நடத்தப்பட்டதில், மதிப்பெண் வழங்குவதில் மோசடி நடந்திருப்பதாக புகார் கூறப்பட்டது.
இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட சைபர் கிரைம் போலீஸார், இது தொடர்பாக 156 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இடைத்தரகர்கள், டேட்டோ எண்ட்ரி செய்யும் ஊழியர்கள் என 8 பேர் கைது செய்யப் பட்டனர். அவர்களில் 5 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் மின்வாரிய ஊழியர் சுப்ரமணியன் என்பவர், வெளிநாட்டுக்குத் தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது. டேட்டா எண்ட்ரி ஊழியர் ராஜேஷ் தலைமறைவாக உள்ளார். முக்கிய ஆவணங்களும் இவர்கள் இருவரிடம்தான் உள்ளன.
இதனால் இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டிருந்தது. இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறையில் இளநிலை உதவியாளராக உள்ள விநாயகமூர்த்தி என்பவரை சைபர் கிரைம் போலீஸார் இன்று கைது செய்தனர். சென்னை பெரவள்ளூரைச் சேர்ந்த இவர், இந்த விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக போலீஸார் கூறியுள்ளனர்.