சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் நாளை முதல் இயங்கும் என்று, அமைச்சருடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். அமைச்சர், அதிகாரிகள் அளித்துள்ள உறுதிமொழியை ஏற்று போராட்டம் வாபஸ் பெறப் பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் நாளை முதல் திரையரங்குகள் இயங்கும் என்றும் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு உறுதி அளித்துள்ளதாகவும் அபிராமி ராமநாதன் தெரிவித்தார்.
8 சதவீத கேளிக்கை வரியை ரத்து செய்வது. பராமரிப்புக் கட்டணம் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக 16ஆம் தேதி முதல் சென்னை தவிர்த்த மற்ற இடங்களில் திரையரங்குகள் மூடப் பட்டன. இந்நிலையில் முதல்வரை அவரது இல்லத்தில் திரையரங்கு உரிமையாளர்கள் இரு தினங்களுக்கு முன் சந்தித்துப் பேசினர்.
இதனைத் தொடர்ந்து இன்று அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, கே.சி.வீரமணி உள்ளிட்டோரை திரையரங்கு உரிமையாளர்கள் சந்தித்துப் பேசினர். அப்போது, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர்கள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து நாளை முதல் திரையரங்குகள் இயங்கும் என்று அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார். எனவே, நாளை முதல் மீண்டும் தியேட்டர்களில் சினிமா பார்க்கலாம்!