பெண் ஊடகவியலாளர்கள் குறித்து பேஸ்புக்கில் கருத்தை பகிர்ந்த வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகரை ஜூன் 1ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஊடக நிறுவனங்களில் பணி புரியும் பெண்கள் குறித்து தரக் குறைவான வகையில் பேஸ்புக்கில் பதிவு செய்திருந்த ஒருவரின் கருத்தை எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதை அடுத்து அவர் மீது நடவடிக்கை கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நலச் சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் எஸ்.வி.சேகர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. எஸ்.வி. சேகர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘பேஸ்புக் கருத்துப் பகிர்வு தொடர்பாக, தாம் சரியாகப் படித்துப் பார்க்காமல் பகிர்ந்ததாகக் கூறி, எஸ்.வி. சேகர் மன்னிப்பு கேட்டுள்ளார். எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்’’ எனக் கோரினார்.
இதை ஏற்ற நீதிபதிகள் எஸ்.வி.சேகரை ஜூன் 1ஆம் தேதி வரை தமிழக காவல் துறை கைது செய்ய தடை விதித்தனர். மேலும் இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.