biggboss onion - 2026
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒளிபரப்பை தடை செய்ய வலியுறுத்தி விஜய் டி.வி. அலுவலகத்தின் முன் இந்து மக்கள் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி, விஜய் டி.வி.யில் கடந்த வருடம் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 2 கடந்த ஜூன் 17 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

மீண்டும் கமல்ஹாசனே இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த முறையும் நிகழ்ச்சி ஒளிபரப்பானபோது, இந்து மக்கள் கட்சியினர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். தற்போது, பிக்பாஸ் சீஸன் 2 நிகழ்ச்சிக்கு எதிராக இந்து மக்கள் கட்சியினர் மீண்டும் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் விஜய் டிவி., அலுவலகத்தை இன்று காலை முற்றுகையிட்டனர். பிக்பாஸ் நிகழ்சியில் நடக்கும் நிகழ்வுகளை பதாகைகளாக கையில் ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். இந்தப் போராட்டத்தில் 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

ALSO READ:  சிறுபான்மை தாஜா அரசியல்; அள்ளிவிடும் தவெக., அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்!

போராட்டம் குறித்து தகவல் அறிந்த போலீஸார் விஜய் டிவி அலுவலகத்துக்கு பாதுகாப்பு அளித்தனர். சுமார் 50க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

நிகழ்ச்சி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலாளர் செந்தில் குமார், பிக்பாஸ் நிகழ்ச்சி முழுக்க முழுக்க கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் சீரழிக்கும் நிகழ்ச்சியாக உள்ளது. இந்த நிகழ்ச்சி குழந்தைகளை தவறான பாதைக்கு செல்ல வழிவகுக்கும். சினிமா துறையில் சென்சார் போர்டு உள்ளது போல் தொலைக்காட்சிக்கும் சென்சாரைக் கொண்டு வர வேண்டும் என்றார். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending