ப.சிதம்பரம் வீட்டில் கொள்ளை; வைர நகையும் ஒரு லட்சம் ரூபாயும் திருடு போனதாம்!

சென்னை: மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் வீட்டில் வைர நகைகளுடன் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப் பட்டுள்ளதாக புகார் கூறப் பட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்துக்கு சென்னை நுங்கம்பாக்கம் பைகிராப்ட்ஸ் கார்டன் சாலையில் வீடு உள்ளது. அந்த வீட்டில் இருந்து கடந்த வியாழக்கிழமை அன்று ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் வைர நகைகள் கொள்ளை அடிக்கப் பட்டுள்ளதாக சென்னை ஆயிரம் விளக்கு போலீஸில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.

இது குறித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் ப.சிதம்பரம் வீட்டின் சி.சி.டி.வி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் வியாழக்கிழமை இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது தெரியவந்தது. அந்த அறைக்குள், முகத்தை மறைத்துக் கொண்டு யாரோ செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. வீட்டில் வேலை செய்பவர்களில் யாராவது திருடியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.