30-05-2023 3:48 AM
More

  Shut up. Shall We?

  A Centenary Plus, Retold 

  Homeஉள்ளூர் செய்திகள்பெற்றோர் என்ன பணம் காய்ச்சி மரமா? கல்வியை வியாபாரமாக்கிய எஸ்எஸ்எம் பள்ளி ‘ஒரு சாபக்கேடு’!
  spot_img

  சினிமா...

  Featured Articles

  To Read in Indian languages…

  பெற்றோர் என்ன பணம் காய்ச்சி மரமா? கல்வியை வியாபாரமாக்கிய எஸ்எஸ்எம் பள்ளி ‘ஒரு சாபக்கேடு’!

  தமிழகத்தில் புற்றீசல் போல் முளைத்துள்ள கல்வி நிறுவனங்கள் எல்லாம் பெற்றோரை பணம் காய்ச்சி மரங்களாகக் கருதும் போக்கு, கல்வித் துறைக்கே ஒரு சாபக்கேடு! குறிப்பாக கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் பரவலாக விவாதப் பொருளாகி, பெற்றோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ள சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

  சென்னையில் உள்ள எஸ்.எஸ்.எம் என்ற தனியார் பள்ளியில் மாணவர்கள் கல்வியைத் தொடர வேண்டுமானால் வரும் கல்வியாண்டுக்குள் ரூ.2 லட்சம் நீட்டிக்கப்பட்ட முன்வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியது. இதை எதிர்த்து பெற்றோர்கள் போராட்டத்தில் குதித்தனர். இவ்வகையில் ரூ.200 கோடி அளவுக்கு வசூல் செய்ய திட்டமிட்டுள்ளது அந்தப் பள்ளி. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, தாங்கள் பள்ளியையே மூடப் போவதாக ஒரு அறிக்கையை அது வெளியிட்டிருக்கிறது. இந்தச் சம்பவம் பெரும் விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.

  சென்னை அருகே குரோம்பேட்டை, பெருங்களத்தூர் பகுதிகளில் எஸ்எஸ்எம் என அழைக்கப்படும் ஸ்ரீமதி சுந்தரவள்ளி மெமோரியல் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இரண்டு இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளை ஸ்ரீமதி சுந்தரவள்ளி மெமோரியல் கல்வி அறக்கட்டளை சார்பில் பள்ளிகளின் தாளாளராக இருந்து சுந்தவள்ளியின் மகன் சந்தானம் என்பவர் நடத்தி வருகிறார்.

  1965ல் 6 ரூபாய் தினக் கூலியாக வாழ்க்கையைத் தொடங்கினார் சந்தானம். பின்னாளில் அவரது வளர்ச்சி வியக்கத்தக்க வளர்ச்சிதான்! 1985, 1986 ஆம் ஆண்டுகளில் இந்த இரு பள்ளிகளைக் கட்டிய அவர் அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் 2 பள்ளிகளைக் கட்டினார். தற்போது இந்த 4 பள்ளிகளிலும் 10,121 மாணவர்கள் பயில்கின்றனர்.

  கல்வி, ஒழுக்கம், கண்டிப்பு என அந்தப் பகுதிகளில் பேர் பெற்ற இந்தப் பள்ளிகள், இப்போது பெரும் சிக்கலைச் சந்தித்துள்ளன. இந்தப் பள்ளிகளில் இடம் கிடைப்பது பெரிய விஷயம் என்று கருதிக் கொண்டு பெற்றோர் பலர் போட்டி போட்டு தங்கள் குழந்தைகளை இந்தப் பள்ளிகளில் சேர்த்தனர். அட்மிஷனுக்கு அலைமோதும் கூட்டம், அவ்வப்போது வெளியாகும் விளம்பரங்கள் என இந்தப் பள்ளி பேசப்படும் பள்ளியாகத் திகழ்ந்தது. இப்போதும் அது பேசப் படும் பள்ளியாகிவிட்டது.

  தன் பள்ளி மாணவர்களின் பெற்றோரை பணம் காய்க்கும் மரமாக கருதி பள்ளி நிர்வாகம் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அந்த சுற்றறிக்கையில், ஒவ்வொரு மாணவருக்கும் அவர்களின் பெற்றோர் தலா 2 லட்சம் ரூபாய் நீட்டிக்கப் பட்ட முன்வைப்புத் தொகையாக பள்ளியில் செலுத்த வேண்டும். இந்தப் பணத்தை உடனே செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. வரும் 2019-2020 கல்வி ஆண்டுக்கான நீட்டிக்கப்பட்ட முன்வைப்புத் தொகையாக (என்ஹான்ஸ்ட் காஷன் டெபாசிட்) ரூ.2 லட்சத்தை வரும் ஏப்ரல் 2019க்குள் செலுத்தினால் போதும். இவ்வாறு ரூ. 2 லட்சத்தை தாங்கள் செலுத்துகிறோம், அல்லது செலுத்த விரும்பாமல் மாணவரின் மாற்றுச் சான்றிதழை (டிசி) இந்தக் கல்வி ஆண்டின் இறுதியில் பெற்றுக் கொள்கிறோம் என்ற இரண்டே இரண்டு வாய்ப்புகளுடன் வரும் ஜூலை 31ம் தேதிக்குள் பெற்றோர் கையெழுத்திட்டுத் தர வேண்டும் என்ற சுற்றறிக்கை, பலரது தூக்கத்தைக் கெடுத்தது. பெற்றோர் பலரையும் கொந்தளிக்க வைத்தது.

  இந்த ஆண்டே செலுத்த முடியுமா? என்ற முடிவை வருகிற 31ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும், இல்லையெனில் தங்கள் குழந்தைகளை வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளலாம் என்ற குறிப்புதான் பலரது கோபத்துக்கும் காரணம்.

  இந்த சுற்றறிக்கை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கெனவே கல்வி, போக்குவரத்துக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளி நிர்வாகத்திடம் முன் பணமாக 20 ஆயிரம் செலுத்தியுள்ள நிலையில், மேலும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலுத்தக் கோருவது அதிக தொகை என பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

  ஆனால் பள்ளி நிர்வாகமோ, பெற்றோருக்கு அனுப்பிய கடிதத்தில் தரமான கல்வியை அடுத்த ஒரு தலைமுறைக்கும் அளிக்க வேண்டுமானால் இதனை நடைமுறைப் படுத்த வேண்டியது கட்டாயச் சூழல் என்பதை விளக்கியிருந்தது. ஆனால் தாங்க முடியாத நிர்வாக செலவுகளை ஈடுகட்டுவதாக நிர்வாகம் கூறியுள்ளது ஏமாற்று வேலை என்கின்றனர் பெற்றோர். அதற்கு அவர்கள் கூறும் காரணம், பள்ளியின் தாளாளர் சந்தானம் தாம்பரத்தில் பல ஏக்கர் பரப்பில் உலகத் தரத்தில் கட்டிவரும் பொழுது போக்கு மனமகிழ் மன்றம் மற்றும் 1200 படுக்கை வசதியுடன் கூடிய எஸ்.எஸ்.எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு கோடிக் கணக்கில் நிதி தேவைப் படுவதாகவும் அதற்காகவே இந்த திடீர் முன்வைப்புத் தொகை வசூல் என்றும் கூறுகின்றனர்.

  அண்மைக் காலமாக இந்தக் குழுமத்தின் எஸ்.எஸ்.எம் ரியல் எஸ்டேட் நிறுவனம் பணமுடக்கத்தில் சிக்கியுள்ளது என்றும், உடனடியாக வங்கியில் கடன் பெற முடியாத நிலையில், பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களிடம் தலா 2 லட்சம் வீதம் வசூலித்து 10 ஆயிரம் மாணவர்களுக்கு 200 கோடி ரூபாய் நிதி திரட்டி, அதன் மூலம் தங்களது நிதிச் சிக்கலை சமாளித்து விடலாம் என்று கருதுகிறது எனவும் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

  மாணவர்களின் பெற்றோர் முதலில் பள்ளி நிர்வாகத்திடம் கோபமாகப் பேசியுள்ளனர். தொடர்ந்து, அந்தப் பகுதி எம்.எல்.ஏ.,வையும் உடன் வைத்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்தது பள்ளி நிர்வாகம். இதை அடுத்து, இந்த விஷயத்தை அரசியலாக்குவதாகவும், நாகரீகமற்ற முறையில் பெற்றோர் நடந்து கொள்வதாகவும் கூறி, பள்ளியின் தாளாளர் சந்தானம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெற்றோரை மிரட்டும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

  அந்த அறிக்கையில் சட்டம் அனுமதித்தால் நடப்பு கல்வியாண்டின் பாதியிலேயே குரோம்பேட்டை, பெருங்களத்தூரில் உள்ள இரு எஸ்எஸ்எம் பள்ளிகளையும் நிரந்தரமாக மூடுவது அல்லது வேறு நிர்வாகத்துக்கு கைமாற்றிவிடுவது என இரு வாய்ப்புக்களில் ஒன்றைத் தேர்வு செய்யும் சூழலுக்கு தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

  இந்த அறிவிப்பால் பெற்றோர் மிரண்டனர். தங்கள் குழந்தைகளின் கல்வி எதிர்காலம் வீணாகி விடும் என்றும், ஒரு வருடப் படிப்பு வீணாகி விடக் கூடாது என்றும் பதற்றப் பட்டனர். இதனிடையே பள்ளிக்கு அனுமதி வழங்கிய சிபிஎஸ்இ., அதிகாரிகளோ, பள்ளியின் இந்தத் திடீர் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்தனர். தொடர்ந்து நடத்தப் படும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே பள்ளிக்கு அனுமதிச் சான்று வழங்கப்படுகிறது என்றும், பள்ளித் தாளாளரின் இந்த அறிவிப்பு, விதிமுறைகளுக்கு முரணானது என்பதால், இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் கூறினர்.

  அறம் செய விரும்பு, அடுத்தவரை ஏமாற்றாதே என்று கல்வி அறிவு புகட்டி மாணவர்களை நல்லவர்களாகத் தயார் படுத்த வேண்டிய பள்ளிகளே முறைகேடுகளிலும் ஒழுக்கக் கேடுகளிலும் சிக்கி, கல்வியை வியாபாரமாக்குவது தமிழகத்தின் சாபக்கேடுதான், சாபக்கேடேதான்!

  1 COMMENT

  1. எஸ்.எஸ்.எம் – ஸ்ரீமதி சுந்தரவல்லி மெமோரியல் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான 4 பள்ளிகளில் பயிலும் 10421 மாணவர்களின் நலன் கருதியும், அந்த நிர்வாகத்தினர் செய்யும் கல்விக்கொள்ளைகளையும், அந்த மாணவர்களின் நிதிச்சுமைகளையும் கருத்தில் கொண்டு தமிழக அரசின் கல்வித்துறையே அந்த பள்ளிகளை ஆக்ரமித்து, அரசு பள்ளிகளாக மாற்ற ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது ?

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  six + 2 =

  This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  Follow us on Social Media

  19,024FansLike
  389FollowersFollow
  83FollowersFollow
  0FollowersFollow
  4,749FollowersFollow
  17,300SubscribersSubscribe

  ஆன்மிக