சென்னை: இன்றைய அதிமுக., செயற்குழுக் கூட்டத்தில், பெரியார், அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக., தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம், அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் தொடங்கியது. இதற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில் திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்கள், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றுடன் உள்ளாட்சித் தேர்தல் எப்போது அறிவிக்கப்பட்டாலும் எதிர்கொள்வது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
பெரியார், அண்ணா, ஜெயலிதா ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை வலியுறுத்துவது, ரூ. 328 கோடி செலவில் தமிழகத்தில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொண்டது என… பல்வேறு மக்கள் நலப்பணிகளை மேற்கொண்ட தமிழக அரசைப் பாராட்டுவது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், திமுக தலைவர் கருணாநிதி ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன், கே.பி. அன்பழகன், கடம்பூர் ராஜூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.