சென்னை: இந்தியாவிலேயே மிக உயரமான படப்பிடிப்புத் தளமான எம்ஜிஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். மேலும், ஜெயலலிதா படப்பிடிப்பு அரங்கு அமைக்க ரூ. 5 கோடி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
மாமல்லபுரம் அருகே பையனூரில் தமிழக அரசு சார்பில் 65 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு அதில் 15 ஏக்கரில் பிரமாண்டமான படப்பிடிப்புத் தளம் கட்டப்பட்டுள்ளது. ரூ.5 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்தப் படப்பிடிப்பு தளம் இந்தியாவிலேயே மிக உயரமானதாகும். 56 அடி உயரத்தில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்தப் படப்பிடிப்புத் தளத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
நலிவடைந்த திரைப்படத் தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டுவதற்கான திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிப் பேசிய முதல்வர், திரைப்படத்துறை ஒரு பொழுதுபோக்கு என்பதை மாற்றி திரைப்படங்கள் சமுதாயத்தை மாற்றும் என்பதை நிரூபித்து காட்டியவர் எம்.ஜி.ஆர்.
சட்டத்திற்கு புறம்பாக திருட்டு வீடியோக்களை வெளியிட்டவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அரசு நடவடிக்கை எடுத்தது.
ஜெயலலிதா படப்பிடிப்பு அரங்கு அமைக்க ரூ. 5 கோடி வழங்கப்படும் . விரைவில் திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெறும் என்றும் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, பாண்டியரஜன், நடிகர் சங்க நிர்வாகிகள் விஷால், நாசர், பொண்வண்ணன், கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.