சென்னை: விநாயகர் சதுர்த்தி விழா சுதந்திரமாகக் கொண்டாட இயலாத நிலையில், கடும் நிபந்தனைகளை விதித்துள்ள அரசாணையை எதிர்த்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை இந்து முன்னணி அமைப்பு தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் விநாயகர் சிலைகளை அமைத்து வழிபடவும், அவற்றை ஊர்வலமாக எடுத்துச் செல்லவும், சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கவும் தமிழக அரசு புதிய நிபந்தனைகளை விதித்து அரசாணை பிறப்பித்தது. விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கே பல்வேறு துறையினரிடம் முன் அனுமதி, தடையில்லாச் சான்றுகளைப் பெற வேண்டும் என்று அரசாணையில் கூறப் பட்டிருந்தது.
இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி இந்து முன்னணி அமைப்பின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்தனர்.
இதை அடுத்து, அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என்று கோரி இந்து முன்னணி அமைப்பினர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்து மத பண்டிகைகளுக்கு, குறிப்பாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு ஒவ்வொரு வருடமும் தடைகள் பலவற்றை ஏற்படுத்தி வருகின்றனர். மற்ற மத பண்டிகைகள் கொண்டாடுவதற்கு அனைத்து சுதந்திரமும் உள்ள நிலையில், பெரும்பான்மை சமூகத்தவரான இந்துக்களின் பண்டிகைகளைக் கொண்டாடுவதற்கு மட்டும் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அனைத்து வகையான தடங்கல்கள் தடைகளையும் ஏற்படுத்தி வருவது வழக்கமாகிவிட்டது.
இந்நிலையில், தமிழக அரசின் நிபந்தனைகளை நீக்கக் கோரி, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தொடங்கியுள்ள காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆதரித்து தமிழகம் முழுவதும் இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் துவங்கும் என இந்து முன்னணி மாநில அமைப்பாளர் பக்தவத்சலம் அறிவித்தார்.
இதனிடையே இன்று நடைபெறும் உண்ணாவிரதக் கூட்டத்தில் இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் கலந்து கொண்டுள்ளார். முன்னதாக நேற்றைய உண்ணாவிரதப் பொதுக் கூட்டத்தில், காடேஸ்வரா சுப்பிரமணியன் உடல் நிலை பாதிக்கப் பட்டது. இருப்பினும் அவர் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தி ஈடுபட்டு வருகிறார்.