சென்னையில் அண்ணாசாலையில் சிம்சன் எதிரே உள்ள ஈ.வே.ராமசாமி நாயக்கரினி சிலை மீது செருப்பு வீசிய பாஜக., வழக்கறிஞர் ஜெகதீசன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈ.வே.ராமசாமி நாயக்கரின் 140ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திங்கள்கிழமை அன்று, சென்னை சிம்சன் பகுதியில் அமைந்துள்ள ஈவேரா., சிலைக்கு பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர் மாலை அணிவித்தனர். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த வழக்கறிஞர் ஜெகதீசன் தனது செருப்பை எடுத்து ஈவேரா சிலை மீது வீசி எறிந்தார்.
இதை அடுத்து உடனே சுற்றி வளைக்கப் பட்ட அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது 4 பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில்ஜெகதீசனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இரண்டே நாளில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜெகதீசன் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.